சென்னை: பி.இ, பி.டெக் போன்ற பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடும் தேதி மீண்டும் 3வது முறையாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. வரும் 28ந்தேதி வெளியாகும் என உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பொறியியல்  கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான இணையதள பதிவு முடிவடைந்து, பதிவு செய்த அனைத்து மாணவர்களுக்கும் ரேண்டம் எண் கடந்த மாதம் 26-ந்தேதி வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தரவரிசை பட்டியல் வெளியிடும் தேதி அறிவிக்கப்பட்டது.

அதன்படி 17ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,  சில மாணவர்கள் சரியாக சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் கோரியுள்ளதால், மாணவர்களின் நலன் கருதி 25-ந்தேதியன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது,  மாணவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் இன்னும் முடியாததால் தரவரிசை வெளியீடு தாமதமாகி உள்ளதாக கூறியுள்ளது.

www.tneaonline.org இல் தங்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு விட்டதா என மாணவர்கள் அறியலாம் என்று தெரிவித்துள்ள உயர்கல்வித்துறை, வரும் 28ந்தேதி தர வரிசை பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்து உள்ளது.