மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து 4 நடிகைகள் விலகல்

கொச்சி

லையாள நடிகர் சங்கத்தில் இருந்து 4 நடிகைகள் விலகுவதாக அறிவித்துள்ளனர்.

மலையாள நடிகர் சங்கமான அம்மா வின் மகளிர் அணி ஒன்று இயங்கி வருகிறது.   கடந்த 2017 ஆம் வருடம் புகழ்பெற்ற மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.   அதன் பிறகு இந்த அணி உருவாக்கப்பட்டது.   இந்த புகாரில் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்ட பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சுமார் 84 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.  அதை ஒட்டி அம்மா வில் இருந்து அவர் விலக்கப்பட்டார்.

                  ரிமா,                                                               ரம்யா,                                                                         கீது

தற்போது ஜாமீனில் வந்துள்ள நடிகர் திலீப் மிண்டும் அம்மாவில் இணைக்கப்பட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.   அதற்கு மகளிர் அணி எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.   இந்நிலையில் அந்த அணியை சேர்ந்த 4 மலையாள நடிகைகள் நடிகர் சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.  இதில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நடிகையும் ஒருவர் ஆவார்.

பாதிக்கப்பட்ட நடிகை தனது அறிக்கையில், “ஏற்கனவே அந்த நடிகர் எனக்கு வர வேண்டிய பல திரை வாய்ப்புக்களை தடுத்துள்ளார்.  அது குறித்து நான் புகார் அளித்த போது சங்கம் எதுவும் செய்யவில்லை.  எனக்கு கொடுமை இழைக்கப்பட்ட போதும் சங்கம் எனக்கு உதவ முன் வரவில்லை.   மேலும் அதே நடிகரை மீண்டும் சங்கத்தில் சேர்க்க உள்ள நிலையில் நான் இந்த சங்கத்தில் இருக்க விரும்பவில்லை” எனக் கூறி உள்ளார்.

அவருடன் ரிமா கலிங்கல், ரம்யா நம்பீசன், மற்றும் கீது மோகன்தாஸ் ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளனர்.  இது குறித்து ரிமா கலிங்கல், “நான் சங்கத்தை விட்டு விலகுவதற்கு நடிகரை இணைப்பதும் ஒரு காரணம்.  அதே நேரத்தில் அது மட்டுமே காரணம் அல்ல.    எனது ராஜினாமா மூலம் அடுத்த தலைமுறையினர் எந்த ஒரு சமரசமும் செய்துக் கொள்ளாமல் சுயமரியாதையுடன் வாழ முயல வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய தோழியான ரம்யா நம்பீசன், “தற்போது ஒரு முக்கியமான நிகழ்வில் பொறுப்பில்லாமல் முடிவு செய்துள்ளதை எதிர்த்து நான் ராஜினாமா செய்கிறேன்.   சங்கம் எனது சக பணியாளருக்கு எதிராக எடுத்துள்ள மனிதாபிமற்ற முடிவுக்கு எதிர்ப்பை காட்ட நான் ராஜினாமா செய்கிறேன்.  நானும் ஒரு மனுஷிதான்.  நீதி வெல்லட்டும்” என தெரிவித்துள்ளார்.

நடிகையும் இயக்குனருமான கீது மோகன்தாஸ், “நான் வெகு நாட்களுக்கு முன்பே ராஜினாமா செய்திருக்க வேண்டும்.   நான் அம்மா சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக இருக்கிறேன்.  சங்கம் எடுத்துள்ள தவறான முடிவு குறித்து யாராவது என்னைக் கேட்டால் என்னிடம் பதில் இல்லை.   சங்கத்துக்கு கேள்வி கேட்காமல் தலைமையை பின்பற்றுபவர்கள் மட்டுமே தேவை.  எங்கள் குரல்கள் ஒடுக்கப்படுகின்றன.  நான் என்றும் பாதிக்கப்பட்ட என் தோழிக்காக குரல் கொடுப்பேன்” என தெரிவித்துள்ளர்.