முசாபர்நகர்:

முசாபர்நகர் வன்முறை மற்றும் கலவர குற்றச்சாட்டில் யோகி அரசால்  கைது செய்யப்பட்ட 4 பேர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.  கலவரத்தின்போது அவர்கள் தங்களது தந்தையுடன் மருத்துவமனையில் இருந்தது நிரூபிக்கப்பட்டதால் அவர்களை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

உத்தரபிரதேச மாநிலம்  முசாபர்நகரில் கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்டு மாதம்  இரு சமூகத்தினரிடையே நடைபெற்ற மதக்கலவரத் தில்  சச்சின், கவுரவ் ஆகிய இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து கலவரம் பல இடங்களில் பரவியது. இந்த பயங்கர மோதலில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வேறு இடத்திற்கு சென்று குடியேறினர்.

இந்நிலையில் இது தொடர்பான வழக்குமுசாபர் நகர் நீதிமன்றத்தில் நடைபெற்று கடந்த அண்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கப் பட்டது. அதில், முஜாமில், முஜாசிம், ஃபர்கான், நதீம், ஜனங்கிர், அப்சல் மற்றும் இக்பால் ஆகிய 7 பேர் குற்றவாளிகள் என கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அறிவித்தார். இந்த நிலையில் கலவரத்தின்போது நவாப் மற்றும் சகித் ஆகியோர் அடித்துக்கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் 8 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் கொலையாளியை அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.  அதில், குற்றம் சாட்டப்பட்ட 4 பேரில் ஷோயிப், அட்டிக், மொஹமது, காலித் ஆகியோர் தங்கள் தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள்  விடுவிக்கப்பட்டனர்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யோகி தலைமையிலான பாஜக அரசு திட்டமிட்டு இஸ்லாமிய இளைஞர்களை கைது செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.