4 தொகுதி இடைத்தேர்தல்: மே1ந்தேதி முதல் ஸ்டாலின் பிரசாரம் தொடக்கம்

சென்னை:

4 தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி பொறுப்பாளர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் மே 1ந்தேதி தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதாக அறிவித்து உள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர்,  ஓட்டப்பிடாரம் தொகுதிகளுக்கு மே 19ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

4 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில்  திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களுடன்  ஆலோசனை  நடத்திய ஸ்டாலின்  பிற்பகலில் சூலூர், அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த நிலையில், 4 தொகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்வது குறித்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி  மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். 1ந்தேதி மற்றும் 2ந்தேதி ஓட்டப்பிடாரத்திலும், 3 மற்றும் 4ந்தேதிகளில் திருப்பரங்குன்றத்திலும் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து அரவக்குறிச்சி, சூலூர் தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளும் ஸ்டாலின் 8ந்தேதி தனது தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொள்கிறார்.