சென்னை:

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில்,  தமிழ்க் கலாச்சாரத்தைப் போற்றும் வகையிலும், பயணிகளை கவரும் வகையிலும் 4 நாட்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதாக அறிவித்து உள்ளது. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து செய்திக்குறிப்பிட்டு வெளியிட்டுள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம், இன்று முதல் குறிப்பிட்ட 4 நாட்களில் சென்னையில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் தமிழகத்தின் பாரம்பரிய இசை மற்றும் கலை நிகழ்ச்சி நடத்தப்படும் என்று தெரிவித்து  உள்ளது.

அதன்படி ஜன.24ந்தேதி (இன்று), 27ந்தேதி 30ந்தேதி  மற்றும் பிப்ரவரி 2ந்தேதி  ஆகிய  நாட்களில் இந்த கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும், நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சியான  தேவராட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், ஸ்டேண்ட் அப் காமெடி, நடனம் உள்பட பல நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தெரிவித்து உள்ளது.

நிகழ்ச்சிகளின் விவரம்:

 ஜனவரி 24 ( இன்று):

காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை சென்னை விமான நிலையம் மற்றும் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் வளாகத்தில் ஒயிலாட்டம் மற்றும் தமிழ் ராக் பேண்ட் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

அதனைத் தொடர்ந்து, சோலோ தியேட்டர் சுனந்தா மற்றும் பரத் நாராயண் குழுவினரின் கர்நாடக இசை நிகழ்ச்சி  நடக்க உள்ளது. இதனிடையே, காலை 11:30 மணிக்கு தேவராட்டம் மற்றும் தப்பாட்டம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

ஜனவரி 27 (திங்கட்கிழமை) 
மாலை 5 மணிக்கு கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில்  ஆன்மஜோதி என்ற அமைப்பின் கர்நாடக குவார்டெட் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சென்னை சென்ட்ரல் மெட்ரோ முதல் விமான நிலையம் வரை மாலை 5 முதல் 7 மணிக்கு சத்தியபாமா ரோட்டராக்ட் கிளப் உறுப்பினர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

‘ஜனவரி 30 ( வியாழக்கிழமை) 

ஆலந்தூர் முதல் சென்னை சென்ட்ரல் வரை ரயிலில் மாலை 5 மணிக்கு அபிஷேக்கின் ஸ்டாண்ட் அப் காமடி மற்றும்  பிந்து மாலினியின் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 5.45 மணி முதல் 6:30 மணி வரை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் பிரீத்தி பரத்வாஜின் பாரத நாட்டியம் மற்றும் தீபனின் பறையாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

பிப்ரவரி 2 (ஞாயிற்றுக்கிழமை) 

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் மாலை 6.30 முதல் இரவு 8.30 வரை ஆன் தி ஸ்டீரிட் ஆப் சென்னை இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.