சென்னை: ரஜினி தொடங்கப்போகும் கட்சியின் கட்சி ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டு, பின்னர் தனிக்கட்சி தொடங்கிய அர்ஜுன மூர்த்தி, கட்சியின் தேர்தல் அறிக்கையாக 4துணை முதல்வர்; மாணவர்களுக்கு இலவச பெட்ரோல் என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில், தற்போது, தமிழக  சட்டப்பேரவை தேர்தலில் போட்டியில்லை என அறிவித்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு  ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது.. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி முதல் மார்ச் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 20 ஆம் தேதி நடைபெறுகிறது.  வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, கட்சி சார்பில் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிப்ரவரி 27ந்தேதி அன்று ரஜினி கட்சியின் முன்னாள் ஒருங்கிணைப்பாளராக இருந்த அர்ஜூனமூர்த்தி, இந்திய மக்கள் முன்னேற்றக் கழகம் (இமமுக) என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். அப்போது,4துணை முதல்வர் பதவி – மாணவர்களுக்கு பெட்ரோல், இது வேற  லெவல் அரசியல், இது தமிழ்நாட்டின் விஸ்வரூப அரசியல், உண்மையான மாற்றத்தின் அரசியல்,தமிழ் மக்கள் முன்னேற்றத்திற்கு பயன்படும் அரசியல், எங்கள் கட்சிக்கு ஜாதி, மதம் இல்லை… ஆணவத்தால் வரும் மதமும் இல்லை…’’ என டயலாக்குகளை உதிர்த்தார்.

இந்த நிலையில், தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலில், இந்திய மக்கள் முன்னேற்றக் கழகம் (இமமுக) போட்டியிடாது என்று அறிவித்து உள்ளது-

ரஜினி ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த அர்ஜுனமூர்த்திக்கு, ஒன்றும் கிடைக்காத நிலையில், தற்போது தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.