சென்னை:

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் நீதிபதிகளில் வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என சென்னை உயர்நீதி மன்றம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில்,  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால், 4 மாவட்டங்களுக்கும்,  ஜூன் 19 முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, போக்குவரத்து உள்பட அனைத்தும் முடக்கப்படுவதால், வழக்குகள் விசாரணை தொடர்பாக  சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய நிர்வாகக் குழு கூடி, விவாதித்தது.

அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி,   ஜூன் 30 வரை சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் தவிர, மற்ற நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் வீடுகளில் இருந்து பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் அறிவித்து உள்ளார்.