பாரத்பூர், ஒரிசா

நேற்று நள்ளிரவு ஏற்பட்ட ஒரிசா நிலக்கரி சுரங்க நிலசரிவில் சிக்கி 4 பேர் மரணம் அடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ஒரிசா மாநிலத்தில் உள்ள பாரத்பூர் பகுதியில் மகாநதி நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் இருந்து தினந்தோறும் சுமார் 20,000 டன் நிலக்கரி எடுக்கப்படுகிறது. இங்கு சுரங்கப் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்ரனர். இந்த சுரங்கத்தின் ஒரு பகுதியில் நேர்று சுமார் 15 ஊழியர்கள் பணி புரிந்து வந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது..

நள்ளிரவு திடீரென இந்த சுரங்கத்தில் சுமார் 25 மீட்டர் ஆழத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு பணி புரிந்த அனைவரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டுள்ளனர். இதையொட்டி உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. அவருடைய உத்தரவின் பேரில் ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களுடன் மிட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுவரை மீட்புப் பணியினர் 9 தொழிலாளர்களை படு காயங்களுடன் மீட்டுள்ளனர். அத்துடன் இந்த விபத்தில் 4 பேர் மரணம் அடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் இன்னும் தொடர்ந்து வருகின்றன. இந்த பகுதியில் சுரங்கப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீண்டும் பணி தொடர ஒரு வாரம் ஆகலாம் என கூறப்படுகிறது.