தெலுங்குதேச எம்.பி. விமானத்தில் பறக்க விமான நிறுவனங்கள் தடை!

விசாகப்பட்டினம் :

விமான நிலைய அலுவலகத்தில் தகராறு செய்ததாக தெலுங்குதேச கட்சி எம்.பி.க்கு விமான நிறுவனங்கள், விமானத்தில் பயணம் செய்ய தடை விதித்துள்ளது.

தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. ஜே.சி.திவாகர் ரெட்டி, விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் உள்ள விமான நிலைய அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்டதாக இண்டிகோ, ஏர் இந்தியா விமான நிறுவனங்கள் அவருக்கு தடை விதித்துள்ளன.

திவாகர் ரெட்டி விமா னநிலையம் வர தாமதமானதால், ஏற்கனவே பதிவு செய்திருந்த விமானம் குறிப்பிட்ட நேரத்தில், அவருக்காக காத்திருக்காமல் புறப்பட்டு சென்றது.

பொதுவாக விமானம் புறப்படுவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பாகவே . விமானப் போக்குவரத்து விதிகளின்படி,  பயணிகள் செல்லும் வழி மூடப்படும்.

இந்நிலையில், விமானம் புறப்பட்டுச் சென்ற அரைமணிநேரம் கழித்தே விமான நிலையத்திற்கு திவாகர் ரெட்டி வந்தடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு நுழைவுச் சீட்டு வழங்க விமான நிலைய ஊழியர்கள் மறுத்துவிட்டனர்.

இதனால் கோபமடைந்த ரெட்டி, விமான நிலையத்தில் உள்ள இண்டிகோ விமான நிறுவன அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அங்குள்ள பொருட்களை தூக்கி வீசியும் தாக்குதல் நடத்தி உள்ளார்.

இதுகுறித்து விமான நிறுவனம் விமான நிலைய பாதுகாவலரிடம் புகார் கொடுத்தது. இதுகுறித்த் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், திவாகர் ரெட்டிக்கு இண்டிகோ விமான நிறுவனம் தடை விதித்துள்ளது.

இண்டிகோ விமானத்தை தொடர்ந்து ஏர் இந்தியா விமானமும் அவருக்கு தடை விதித்துள்ளது. இது தவிர மேலும் 2 தனியார் விமான நிறுவனங்களும் திவாகர் ரெட்டிக்கு தடை விதித்துள்ளன.

இதற்கு முன் விஜயவாடாவில் உள்ள கன்னாவரம் விமான நிலையத்தில் உள்ள ஏர் இந்தியா விமான நிலைய அலுவலகத்தின் மீது திவாகர் ரெட்டி தாக்குதல் நடத்தியதால் அவருக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு  மராட்டியத்தை சேர்ந்த சிவசேனா எம்.பிக்கும் விமான நிறுவனங்கள் தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது.