குஜராத்தில் 4 என்கவுண்டர்கள் சந்தேகத்துக்குரியவை : உச்சநீதிமன்றக் குழு அறிவிப்பு

டில்லி

குஜராத் என்கவுண்டர்கள் பற்றி விசாரிக்க உச்சநீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழு அதில் 4 என்கவுண்டர்கள் சந்தேகத்துக்குரியவை என அறிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 முதல் 2006 வரை 17 என்கவுண்டர்கள் நடந்துள்ளன.   இந்த என்கவுண்டர்கள் குறித்து சந்தேகங்கள் எழுந்தன.    இவை அனைத்தும் வேண்டுமென்றே நடந்துள்ளதாக வழக்குகள் தொடரப்பட்டன.   இந்த புகார்கள் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை கடந்த 2012 ஆம் ஆண்டு அமைத்தது.

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியான ஹர்ஜித் சிங் பேட் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டது.   இந்தக் குழு தனது விசாரணையை சென்ற வருட ஆரம்பத்தில் நிறைவு செய்தது.    சுமார் 230 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை குழு கடந்த 2018 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி அளித்தது.

இந்த அறிக்கை பொதுமக்களுக்கு அளிக்கப்படவில்லை.  உச்சநீதிமன்றம் வெகுநாட்களாக இந்த அறிக்கையை ஆய்வு செய்து வந்தது.  நேற்று இந்த அறிக்கையின் நகலை வழக்கு மனுதாரர்களுக்கு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.    இந்த அறிக்கை குறித்து தற்போது தகவல்கள் வந்துள்ளன.

விசாரணை  அறிக்கையில் நடந்து முடிந்த 17 என்கவுண்டர்களில் 4 என்கவுண்டர்கள் சந்தேகத்துக்கு உரியதாக குழு முடிவு செய்துள்ளது.    இந்த என்கவுண்டர்களில் சோராபுதின் ஷேக் என்கவுண்டர் உள்ளிட்ட  வழக்குகளில் தொடர்புடைய ஐபிஎஸ் அதிகரி டி ஜி வன்சராவுக்கு சம்பந்தம் உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்த என்கவுண்டர்களில் எந்த வித அரசியல் தலையீடு குறித்தும் கூறப்ப்டவில்லை.    இந்த வழக்கில் விசாரிக்கப்பட்டவர்களில் என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்களின் வாரிசுகளும் நெருங்கிய உறவினர்களும் உள்ளனர்.   அவர்களிடம் நடந்த விசாரணையில் இந்த 4 என்கவுண்டர் குறித்து நீதிபதி பேடி தலைமையிலான குழு இந்த முடிவு எடுத்துள்ளது.

இந்நிலையில் இந்த 4 என்கவுண்டர் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.    இவர்களில் கடந்த 2002 ஆம் ஆண்டு அக்டோபர் மதம் என்கவுண்டர் செய்யப்பட்ட சமீர்கான் பதானின் வாரிசுக்கு அதிக பட்ச நிவாரணமாகர் ரூ. 20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.   இவர் மோடியை கொல்ல திட்டமிட்டவர் எனவும் ஜெயிஷ் ஏ முகமது தீவிரவாதக் குழுவை சேர்ந்தவ்ர் எனவும் காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டிருந்தார்.