வாஷிங்டன்

மெரிக்க மாநில மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் ஒரு இஸ்லாமியப் பெண் உள்பட நான்கு இந்திய வம்சாவழியினர் வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த அமெரிக்க மாநில மற்றும் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.   இதில் 4 இந்திய வம்சாவழியினர் வெற்றி பெற்றுள்ளனர்.  இவர்களில் கசாலா ஹஷ்மி என்னும் பெண் இஸ்லாமியர் ஆவார்.  இவர் வெர்ஜினியா மாகாண செனட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இஸ்லாமியப் பெண் ஆவார்.

கசாலா ஹஷ்மி டெமாக்ரடிக் கட்சியை சேர்ந்தவர் ஆவார்.  இவர் பாரக் ஒபாமா ஆட்சியின்போது வெள்ளை மாளிகையின் தொழில்நுட்பக் கொள்கை ஆலோசகராகப் பணி புரிந்தவர் ஆவார்.   இவர் சிறுமியாக இருக்கும் போதே தனது குடும்பத்துடன் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறியவர் ஆவார்.   இவர் ஜார்ஜியா மாகாணத்தில் பட்டப்படிப்பு மற்றும் ஆய்வுப் படிப்பை முடித்துள்ளார்.

இவர் தனது கணவர் அசாருடன் கடந்த 1991 முதல் ரிச்மாண்ட் பகுதியில் வசித்து வருகிறார்.     இவர் 25 வருடங்கள் ஆசிரியப் பணி ஆற்றி உள்ளார்.  இவருடைய வெற்றிக்கு அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளின்டன்  பாராட்டு தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற்ற மற்றொரு இந்தியரான சுபாஷ் சுப்ரமனியம் பெங்களூரு நகரைச் சேர்ந்தவர் ஆவார்.   இவருடைய தாய் இவருடன் கடந்த 1979 ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறி டல்லஸ் நகரில் மருத்துவராகப் பணி புரிந்தவர் ஆவார்.  சுபாஷ் சுப்ரமனியம் சுகாதாரத்துறையில்  தொழில்நுட்ப அதிகாரியாக பணி புரிந்துள்ளார்.  இவரை முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தொழில்நுட்ப ஆலோசகராக நியமித்தார்.

கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள இந்திய வம்சாவழியினரான மனோ ராஜு வெற்றி பெற்றுள்ளார்.  இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.  ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் படிப்பை முடித்த பிறகு 90களில் பெர்க்லி நகரில் குடியேறினார்.    இவர் பெர்க்லி நகரில் தனது சட்ட முதுகலைப் படிப்பை முடித்தார்.  அதன் பிறகு சான பிரான்சிஸ்கோவில் பணி புரிந்துள்ளார்.

வடக்கு கரோலினாவில் வெற்றி பெற்றுள்ள டிம்பிள் அஜ்மீரா தனது 16 ஆம் வயதில் பெற்றோர்களுடன் அமெரிக்காவில் குடியேறி உள்ளார்.  அப்போது அவருக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  அவர் சிறிது சிறிதாக ஆங்கிலம் பயின்று தெற்கு கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பு முடித்து பொது கணக்காளர் பட்டயமும்  பெற்றுள்ளார்.