ராணுவ மருத்துவமனையில் ஊமை பெண் ஊழியர் பாலியல் வன்கொடுமை: 4 ராணுவ ஜவான்கள்மீது 4 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு

லக்னோ:

உ.பி.யில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வேலை செய்து வந்த காதுகேளாத ஊமை பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்ததாக  4 ராணுவ ஜவான்கள்மீது 4 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி. மாநிலம்  காட்கி பகுதியில் ராணுவத்திற்கான மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவ மனையில்  கிரேடு-4 ஊழியராகபணியாற்றி வந்த காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத ஊமைப் பெண் ராணுவ வீரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த விதவைப்பெண் இரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது, கடந்த 2014ம் ஆண்டு ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் உள்ள வார்டில் உள்ள பாத்ரூமிற்குள் வைத்து பலாத்காரம் செய்ததாக அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காட்கி காவல்துறையினர், புகார் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். சுமார் 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணையை தொடர்ந்து,  4 ராணுவ வீரர்கள் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது.

அவர்கள்மீது குற்றவியல் நடைமுறைச்சட்டம்   376 மற்றும் 354 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தாக காட்கி இன்ஸ்பெக்டர் ராஜேந்திர மொகைட் தெரிவித்து உள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள ஜவான்கள் தற்போது காஷ்மீரில் வடக்கு பகுதியில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப் பட்டு உள்ளது. குற்றச்சாட்டு குறித்து 6 பேர் கொண்ட ராணுவ அதிகாரிகள் குழு விசாரணை நடத்துவார்கள் என்று ராணுவ அதிகாரி கூறி உள்ளார்.