4பேர் பதவி பறிக்க சதி? சபாநாயகருடன் அதிமுக கொறடா திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் மீண்டும் பூகம்பம்….

சென்னை:

மிழக சபாநாயகர் தனபாலுடன் அதிமுக கொறடா மற்றும் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று திடீரென சந்தித்து பேசினர். இதையடுத்து, டிடிவி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் தெரிகிறது. இதன் காரணமாக தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றி உள்ளது.

ஏற்கனவே எடப்பாடி அரசுக்கு எதிராக டிடிவி தினகரனுடன் இணைந்து  போர்க்கொடி தூக்கிய 18  அதிமுக எம்எல்ஏக்கள் பதவிகள் காலியான நிலையில், தற்போது மேலும் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆகியோர் சபாநாயகர் தனபாலை சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஆலோசனை யின்போது, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிலர் இன்னமும் டிடிவிக்கும், திமுகவுக்கும்  ஆதரவாக  செயல்பட்டு வருவதால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக கூறப்பபபடுகிறது.

சமீப காலமாக டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு  ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள்  இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றிருப்பதால், அவர்கள்மீது கட்சித்தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.

மேலும், அதிமுகவின் ஆதரவு கட்சியை சேர்ந்தவர்கள், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி, கருணாஸ், தணியரசு போன்றோர், பாஜகவுட னான அதிமுக கூட்டணியை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், கருணாஸ், தணியரசு அமைதியாக ஒதுங்கிய நிலையில், தமிமும் அன்சாரி, நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தார். தனது எம்எல்ஏ பதவி பறிபோனாலும் கவலை இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இதனால் கடுப்பான அதிமுக, அவரது பதவியை பறிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளையில் கருணாசும் இடையிடையே அதிமுகவை மிரட்டி வந்த நிலையில், அவர்மீதான வழக்குகள் தூசு தட்டப்பட்டதும், அவர் எடப்பாடியை சந்தித்து பேசி, சரண்டர் ஆனார். தணியரசு தேவையின்றி பேசுவது கிடையாது.

இந்த நிலையில், இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற தமிமும் அன்சாரி உள்பட 4 எம்எல் ஏக்களுக்கு சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தகுதி இழப்பு சட்டம் விதி 6 படி நடவடிக்கை  உங்களை ஏன் தகுதி   நீக்கம் செய்யக்கூடாது என்ற அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பப்பட இருப்பதாகவும் கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

234 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட தமிழக சட்டமன்றத்தில்  தற்போதைய சூழலில் அதிமுக வுக்கு சபாநாயகருடன் சேர்த்து 113 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர்.  அதிமுக அரசு தொடர்ந்து  நிலைத்திருக்க குறைந்த பட்சம் 118  எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்படுகிறது.  தற்போது 18 +4=22 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுவதால், இதில் குறைந்த பட்ச  இடங்களையாவது பிடித்து விடலாம் என்ற அதிமுக கனவு காண்கிறது.

ஒருவேளை தங்களது எண்ணம் நிறைவேறாமல், திமுக கூட்டணி மொத்தமாக வெற்றிக்கனியை பறித்துவிட்டால், அதிமுக ஆட்சியின் ஆயுட்காலம் அதோ கதிதான்…  எனவேதான்….  ஆட்சியை தக்க வைத்துக்கொள்வது எப்படி என்பது குறித்து அதிமுக தலைமை கட்சி மூத்த தலைவர்களுடன்  தீவிர ஆலோசனை நடத்தி வந்தது.

அதைத்தொடர்ந்தே, மேலும் 4 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்துவிட்டால் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில்,  தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 230ஆக குறைந்து விடும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.

4 பேரின் பதவி பறிக்கப்பட்டால், தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 230ஆக குறைந்து விடும் என்பதாலும், இதன் காரணமாக அரசு பெரும்பான்மை நிரூபிக்க வேண்டு மென்றா லும், 116 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே தேவைப்படும். மீதமுள்ள 110 எம்எல்ஏக்கள் உடன் மேலும் 6  எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தாலே போதுமானது என்பதை கருத்தில் கொண்டே, 4 எம்எல்ஏக்களுக்கு ஆப்பு வைக்க அதிமுக தலைமை முன்வந்துள்ளதாகவும், இதன் காரணமாக   சட்டச்சிக்கலை உருவாக்கி குளிர்காய்ந்துகொண்டே  மீதமுள்ள ஆட்சிகாலத்தையும்  ஓட்டிவிடும் எண்ணத்தில் இருப்பதாகவும் தெரிகிறது.

இந்த அரசியல் கண்ணோட்டத்தில்தான்,  தமீமுன் அன்சாரி மற்றும் டிடிவி ஆதரவு 3 எம் எல் ஏக்களுக்கு தகுதி நீக்கம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பூகம்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.