48 மணி நேரத்தில் எரிக்கப்பட்ட 4 மசூதிகள் : குடியுரிமை சட்ட போராட்டமா? மத எதிர்ப்பு போராட்டமா?

டில்லி

டில்லியில் நடைபெறும் வன்முறை போராட்டங்களில் 48 மணி நேரத்தில் 4 மசூதிகள் எரிக்கப்பட்டுள்ளன.

நடைபெற்று வரும் டில்லி கலவரச் சம்பவங்கள் குறித்த வீடியோக்கள் சமூகவலை தளங்களில் ஏராளமாகப் பரவி வருகின்றன.  இவற்றுக்கு இடையில் மொபைல் போனில் ஏராளமான அதிர்வுகளுடன் எடுக்கப்பட்ட ஒரு விடியோ பலரது கவனத்தை ஈர்த்தது.  அது டில்லியின் அசோக் நகரில் உள்ள மசூதி கோபுரத்தின் மீது ஒருவர் ஏறி காவிக் கொடியைப் பறக்க விடும்  வீடியோ ஆகும்.

இதைப் போல் கடந்த 1992 ஆம் ஆண்டு ஆர் எஸ் எஸ் நடத்திய அயோத்தி கர சேவையில் கரசேவகர்கள் பாபர் மசூதியின் கோபுரத்தின் மீது ஏறி அதை இடிக்கும் புகைப்படமும் பலரையும் ஈர்த்தது.    சொல்லப்போனால் மோடியின் அரசியல் வளர்ச்சிக்கு வழி வகுத்து அவரை பிரதமர் பதவி வரை கொண்டு சென்றது பாபர் மசூதி இடிப்பு என்பதில் யாருக்கும் ஐயமில்லை.

தற்போது நடந்து முடிந்த டில்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில் இந்த கலவரங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.  நேற்று முன் தினம் வரை இரு தினங்களில் தலைநகரில் 4 மசூதிகள் எரிக்கப்பட்டுள்ளன.  அசோக் நகரில் உள்ள மவுலானா பாக் மசூதி மற்றும் சந்த் மசூதி, கோகல்புரியில் உள்ள ஜாமியா அராபியா மசூதி மற்றும் சந்த் பாக் பகுதியில் உள்ள மசார் மசூதி ஆகியவை எரிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மசூதிகள் எரிக்கப்படுவதால் இந்த வன்முறைக்குக் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் மட்டும் காரணமில்லை என்பதும் மத எதிர்ப்பு உணர்வே காரணம் என்பதும் தெரிய வந்துள்ளது.   அது மட்டுமின்றி குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமலாக்கம் போன்ற விவகாரங்கள் இந்துக்களின் உணர்வை இஸ்லாமியர்களுக்கு எதிராகத் தூண்டுவதற்காகச் செய்யப்பட்டது எனவும் ஒரு சிலர் கருதுகின்றனர்.

அசோக் நகரில் எரிக்கப்பட்ட மவுலானா பாக் மசூதியைக் கட்டியவர் மகனான நசீருதீன், “இந்த மசூதி எனது தாத்தாவின் நினைவுக்காக கட்டப்பட்டது.  இது எரிக்கப்பட்டது எனது குடும்பத்தில் ஒருவர் மரணம் அடைந்தது போல் உள்ளது.  மசூதிக்கு அருகில் உள்ள இடத்தில் முதல் இடத்தை ஒரு இந்துவுக்கு கடை கட்டிக் கொள்ள 1991 ஆம் வருடம் வாடகைக்கு அளித்தோம்.  அக்கம்பக்கத்தில் மதச் சார்பின்மை நிலவவேண்டும் என்பதற்காக அதைச் செய்தோம்” எனத் தெரிவித்துள்ளார்.  இந்த மசூதிக்கு அருகில் இருந்த 7 கடைகளும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.

அசோக் நகரில் உள்ள சந்த் மசூதி 1986 ஆம் வருடம் கட்டப்பட்டதாகும்.  இந்த மசூதியும் மவுலானா பாக் மசூதியுடன் எரிக்கப்பட்டுள்ளது.   இந்த மசூதிக்குப் பின்னால் வசித்து வரும் முகமது கம்ராதீன் பலமுறை காவல்துறையினரை அழைத்தும் அவர்கள் வரவில்லை எனத் தெரிவித்துள்ளார்.   மசூதியை எரிக்கும் போது அந்த வன்முறை கும்பல் அருகில் உள்ள இஸ்லாமியர் வீடுகளில் எரியும் சாக்கை வீசியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கோகல்புரியில் உள்ள ஜாமியா அராபியா மசூதியை திங்கட்கிழமை அதாவது 24 ஆம் தேதி அன்று ஒரு கும்பல் தாக்கி உள்ளது.   இந்த மசூதி கோகல்புரி மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து ஒரு கிமீ தூரத்தில் உள்ளது.  இந்த பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் கரீம் கான், “சுமார் 30 பேர் கொண்ட ஒரு கும்பல் ஜெய்ஸ்ரீராம், முஸ்லிம்களே வெளியேறுங்கள் எனக் கோஷமிட்டபடி நுழைந்து மசூதியைத் திங்கள் கிழமை மதியம் மற்றும் அன்று இரவு ஆக இரு முறை தாக்கினார்கள்.   பயந்து போய் இருந்த எங்களை அருகில் இருந்த இந்துக்கள் ஆறுதல் கூறி சமாதானம் செய்தனர்.” எனத் தெரிவித்துள்ளார்.

கோகல்புரியில் வசிக்கும் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் இந்த மசூதி 1978ல் கட்டப்பட்டதாகும்.  இதை ஜன்னதி மசூதி எனவும் அழைக்கின்றனர்.   இந்த மசூதி எரிக்கப்பட்டபிறகு இந்த மசூதியின் கோபுரத்தில் காவிக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது.   சலவைக் கற்களால் கட்டப்பட்ட இந்த மசூதி தற்போது சின்னாபின்னமாகி உள்ளது.

இதே வன்முறை மசார் மசூதியிலும் நிகழ்ந்துள்ளது.  இந்த மசூதிக்கு அருகே உள்ள இஸ்லாமியர்களின் வீடுகளை வன்முறை கும்பல் தாக்க முயன்ற போது அருகில் இருந்த இந்துக்கள் அவர்களைத் தடுத்துள்ளதாக அங்குள்ள இஸ்லாமியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  ஆயினும் அங்குள்ள இஸ்லாமியர் வீடுகளில் உள்ள பணம் மற்றும் விலை மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.