மத்திய பிரதேசம் : நான்கு அமைச்சர்களின் தோல்விக்கு நோட்டா காரணம்

போபால்

த்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் 4 அமைச்சர்கள் உள்ளிட்ட பல பாஜகவினர் நோட்டாவால் தோல்வி அடைந்துள்ளனர்.

பொதுவாக நோட்டாவுக்கு போடப்படும் வாக்குகள் எந்த ஒரு வேட்பாளரையும் பிடிக்காததால் போடப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் பல சமயங்களில் நோட்டா என்பது ஆளும் கட்சிக்கு எதிரான வாக்கு எனவே கருதப் படுகிறது. பல இடங்களில் வாக்காளர்களும் தங்களின் ஆளும் கட்சியின் எதிர்ப்பை காட்டவே நோட்டாவுக்கு வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடந்து முடிந்த மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பல இடங்களில் வெற்றி பெற்றவர்கள் வாக்கு வித்தியாசத்தை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. அதிலும் அமைச்சர்களின் தொகுதிகளிலும் இவ்வாறு நடந்துள்ளன. மத்தியப் பிரதேசத்தில் பலமான வேட்பாளர்கள் என கூறப்படும் 4 வேட்பாளர்கள் நோட்ட்டாவால் தோல்வி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மத்தியப் பிரதேச மாநில நிதி அமைச்சர் ஜெயந்த் மலையா 799 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளார். அவர் தொகுதியில் 1299 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். அதைப் போலவே சுகாதாரத்துறை அமைச்சரான ஷரத் ஜெயின் 578 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுள்ள நேரத்தில் அவர் தொகுதியில் 1209 வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்துள்ளன. அமைச்சர் அர்ச்சனாவின் தொகுதியில் 5700 வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்துள்ளதும் அவர் 5120 வாக்குகள் வித்தியாசத்டில் தோற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மொத்த வாக்குகளில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையிலான வாக்கு வித்தியாசம் 0.1% மட்டுமே உள்ள நேரத்தில் நோட்டாவுக்கு 1.4% வாக்குகள் கிடைத்துள்ளன. சுமார் 5.4 லட்சம் வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். எனவே இந்த தேர்தலில் பாஜகவை தோற்கடித்ததில் எதிர்க்கட்சிகளை விட நோட்டாவின் பங்கு அதிகம் உள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.