ஜனவரி மாதத்திற்குள் 4 ராக்கெட், 6 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவ திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன்

ஸ்ரீஹரிகோட்டா:

ந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சார்பில், ஜனவரி மாதத்திற்குள் 4 ராக்கெட், 6 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்து உள்ளார்.

உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட  அதி நவீன தகவல் தொடர்பு சேவைக்காக ஜி- சாட் 29 செயற்கைக் கோள், ஜி.எஸ்.எல்.வி மார்க் 3-டி2 ராக்கெட் மூலம் நேற்று  வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில்  வெற்றி கரமாக நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. ரூ.400 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக் கோளின் ஆயுள்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.

இந்த வெற்றியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன் கூறியதாவது:

விண்வெளித்துறையில் இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரியில் சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படும். இந்த  சந்திராயன் விண்கலத்திலும் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என கூறினார்.

இந்த செயற்கைகோள் மூலம், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் சேவைகள் வழங்கப்பட உள்ளதாக கூறினார்.

இன்னும் மூன்று ஆண்டுகளில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் செயல்படுத்தப்பட உள்ளது. விண்கலத்தில் மூன்று பேர் கொண்ட குழுவாக சென்று 5 முதல் 7 நாட்கள் விண் வெளியில் தங்கி ஆய்வு பணிகளை மேற்கொள்வார்கள்.

இதன் முன்னோட்டமாக, 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆளில்லாத விண்கலத்தைச் சோதனை அடிப்படையில் விண் வெளிக்குச் செலுத்தி தகவல்களைச் சேகரிக்க உள்ளதாகவும்,  விண்வெளிக்கு  மனிதனை அனுப்பும் திட்டத்திற்காக ஆட்களைத் தேர்வு செய்யும் நடைமுறை பணிகள் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.