மரபணு மாற்றப்பட்ட போலி பருத்தி விதைகளை வாங்கி விவசாயிகள் ஏமாற்றம்… விதை நிறுவனங்கள் மீது வழக்கு

மும்பை:

மரபணு மாற்றப்பட்ட போலி பருத்தி விதைகள் என்று கூறி விவசாயிகளை ஏமாற்றியதாக 4 விதை நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

பருத்தி சாகுபடியில் செம்புழுக்களின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகள் என்று கூறி 4 பிரபல நிறுவனங்கள் அறிமுகம் செய்தன. இவற்றை மகாராஷ்டிரா விவசாயிகள் வாங்கி பயன்படுத்தினர். ஆனால், இது போலி விதை என்பது தெரியவந்தது. இவை செம்புழுக்களுக்கு எதிராக செயல்படவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து பிரபல சர்வதேச நிறுவனமான பேயர் கிராப் சயின்சஸ், நாக்பூர் ஆன்கர் சீட்ஸ், தமிழகத்தில் ராசி சீட்ஸ், ஆந்திராவில் நுழிவீடு சீட்ஸ் ஆகிய நிறுவனங்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. சுவபிமணி சேத்கரி சங்கன்தனா என்ற அமைப்பை நடத்தும் சமூக ஆர்வலர் ராஷூ ஷெட்டி என்பவர் அளித்த புகாரின் பேரில் ஜெய்னா மற்றும் அமராவதி மாவட்ட போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

 

விதை மாதிரிகளை வேளாண் துறை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே நிறுவனங்களுக்கு எதிரான வழக்கு விசாரணை தொடங்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது போல் விதை நிறுவனங்கள் மீது கடந்த ஆண்டு 13 லட்சம் புகார்கள் மாநில வேளாண் துறைக்கு வந்தது. இதில் 9 லட்சம் வழக்குகள் மீது விசாரணை நடத்தப்பட்டு விவசாயிகளுக்கு ரூ.93 கோடி வரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

You may have missed