தற்கொலை செய்துகொண்ட மாணவிகள் – கிணறு

வேலூர்,

வேலூர் மாணவிகள் தற்கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூலாக சொல்லிவிட்டு சென்றுவிட்டார்  பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

வேலூர் மாவட்டம் பணப்பாக்கம் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் தீபா, சங்கரி, மணீஷா, ரேவதி ஆகிய நான்கு மாணவிகள் நேற்று மாலை ராமாவரத்தில் உள்ள 60 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இது தொடர்பாக தகவலறிந்ததும் விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மாணவிகளின் உடல்களை மீட்டனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பட்டுள்ளது.

மாணவிகளின் மரணத்துக்கு அவர்கள் படித்த பள்ளியின் ஆசிரியைகள் காரணம் என்று புகார் கூறப்பட்டது.

இதன் காரணமாக  பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஒரு ஆசிரியையிடம் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் விசாரணை நடத்தி வருகிறார்.

பருவத் தேர்வில் மாணவிகள் சரியாக மதிப்பெண் எடுக்காததால் , ஆசிரியைகள் திட்டியதாலும், பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து வர வேண்டும் என்று கூறியதாலும் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 4 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

விசாரணையில், ஆசிரியர்கள் திட்டியதில் மனமுடைந்த மோனிஷா, தீபா, சங்கரி, ரேவதி உள்ளிட்ட ஆறு மாணவிகள் தற்கொலை செய்துகொள்ள கிணற்றிற்கு சென்று இருக்கிறார்கள். நான்கு பேர் குதித்த நிலையில், பயந்து போன எஞ்சிய இரண்டு மாணவிகள் உடனே அருகிலுள்ள ஊருக்கு சென்று மக்களை அழைத்து வந்து இருக்கிறார்கள்.

மாணவிகள் தற்கொலைக்கு காரணமான ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகளின்  பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவிகள் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பணப்பாக்கத்தில் இன்று கடையடைப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில், ராமேஸ்வரம் வந்திருந்த அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர்  செங்கோட்டையன் , வேலூர் மாணவிகள் தற்கொலை தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது என்றார். விசாரணை முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  கூலாக தெரிவித்துவிட்டு சென்றுவிட்டார்.

அமைச்சரின் பொறுப்பற்ற பதில் மாணவிகளின் பெற்றோர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.