ஜான்சி

காசி, வாரணாசி போன்ற புனித ஸ்தலங்களக்கு யாத்திரை சென்ற முதியவர்கள் ரயிலில் திரும்பி வரும் வழியில், உ.பி. மாநிலத்தில் நிலவும்  கடும் வெப்பத்தை தாக்குபிடிக்க முடியாமல் உடல் நலிவுற்று பலியானார்கள். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் வெயில் கொளுத்தி வரும் நிலையில், தமிழகத்தை சேர்ந்த சுமார்  68 பேர் அடங்கிய குழு வாரணாசி மற்றும் ஆக்ராவிற்கு புனித யாத்திரை  சென்றிருந்தனர்.

இந்த குழுவினர் தங்களது யாத்திரையை முடித்துவிட்டு, ஆக்ராவில் இருந்து கேரளா எக்ஸ்பிரஸ் ரெயிலில் படுக்கை வசதிகொண்ட பெட்டி  கோவைக்கு நேற்று திரும்பிக் கொண்டிருந்தனர். ரயில் உ.பி.யில் வந்துகொண்டிருந்தபோது  அங்கு நிலவிய கடும் வெப்பம் காரணமாக, பச்சையா (வயது 80), பாலகிருஷ்ணா (வயது 67), தனலட்சுமி (வயது 74), தெய்வானை (வயது 71) ஆகியோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்கள் வரும் வழியிலேயே பலியானார்கள்.   மேலும் சுப்பாரய்யா (வயது 71) என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புனித யாத்திரைக்கு சென்ற முதியவர்கள் வெயிலின் கொடுமையால் உயிரிழந்த சம்பவம் கோவை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.