பசுமைவழிச் சாலைக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு 4 மடங்கு இழப்பீடு: தமிழக அரசு

சென்னை:

சென்னை சேலம் பசுமைவழி எக்ஸ்பிரஸ் சாலைக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு 4 மடங்கு அதிகமான இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது.

சேலம் – சென்னை இடையே அமைய உள்ள பசுமை வழி எக்ஸ்பிரஸ் சாலைக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சாலை அமைய உள்ள பகுதியை சேர்ந்த 5 மாவட்ட மக்கள் வீடுகளில் கருப்புகொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். ஆனால், திட்டமிட்டப்படி சென்னை சேலம் பசுமை வழிச்சாலை அமைத்தே தீருவோம் என்று மத்திய மாநில அரசுகள் பிடிவாதமாக கூறி வருகிறது.

இத் நிலையில், சாலைக்காக நிலம் கையப்படுத்துதல் தொடர்பாக கடந்த 2013-ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த   ‘நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, மறு வாழ்வு, மறு குடியமர்வு மற்றும் நில ஆர்ஜிதப்படுத்தலில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் சட்டத்தை மேற்கோள் காட்டி  மத்திய மாநில அரசுகள்  நிலத்தை கையப்படுத்த முயற்சிகள் செய்து வருகின்றன.

இந்த சட்டத்தில்,  பொதுத் தேவைக்காக நிலம் கையகப்படுத்தும்போது, நில உரிமையாளர்க ளுக்கு நியாயமான இழப்பீடு வழங்கவும் அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவது உள்ளிட்ட பல அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த சட்டத்தில் உள்ள 105-ஆவது பிரிவின்படி, நிலம் கையகப்படுத்தும் போது சமூக பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய அவசியம் இல்லை என குறிப்பிட்டுள்ளது.

இந்த  சட்டப் பிரிவை எதிர்த்து  ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அப்போது,

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம் மற்றும் சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது,   2013-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தில் உள்ள பிரிவு 105-இன் படி,  தேசிய நெடுஞ்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும்போது சமூக பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய அவசியம் இல்லை என குறிப்பிட்டுள்ளது  மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை தடுக்கும் வகையில் உள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும் இந்த சட்டம்  காரணமாக மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த சட்டப் பிரிவை சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும் என கூறப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு வழக்கறிஞர், நில உரிமையாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்துப் பலன்களும் கிடைக்கும் வகையில் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளதாக கூறி அதன்  நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

தொடர்ந்து ஆஜரான  தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், இந்த திட்டத்திற்கு நிலம் வழங்குபவர்களுக்கு சந்தை மதிப்பை விட 3 முதல் 4 மடங்கு வரை இழப்பீடு வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

தமிழக அரசின் பதிலை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 105-ஆவது சட்டப் பிரிவை நீக்குவது தொடர்பாக ஜூலை 12 ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு  நோட்டீஸ் அனுப்ப  உத்தரவிட்டனர்.