4 திருநங்கைகள் சபரிமலை பயணம்: கேரள அரசு, தந்திரிகளும் அனுமதி

திருவனந்தபுரம்:

பரிமலைக்கு சென்ற  மூன்றாம் பாலித்தவர்களான 4 திருநங்கைகளை கோவிலுக்கு செல்ல கேரள மாநில அரசும், தந்திரிகளும் அனுமதித்துள்ளனர்.

சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று  உச்சநீதி மன்றம் அளித்த  தீர்ப்பை தொடர்ந்து பல பெண்கள் செல்ல முயற்சி மேற்கொண்ட நிலையில், பக்தர்கள் மற்றும் தந்திரிகளின்  கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், சபரிமலை கோவிலுக்கு செல்ல 4 திருநங்கைகள், விரதம் இருந்து இருமுடி கட்டி வந்திருந்தனர். கோவிலுக்கு 5 கி.மீ.  தூரத்தில் மலையேற்றம் செய்வதற்கு முன்பு இன்று காலையில் பம்பை வந்தடைந்தனர்.

அவர்களால் பிரச்சினை ஏற்பட்டுவிடக்கூடாது என்று கருதி, காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. ஆனால், அவர்கள் கோவிலுக்கு செல்வதை பக்தர்கள் யாரும் தடுக்க வில்லை.

இந்த நிலையில், கேரள அரசு சார்பில், கேரள உயர்நீதி மன்றம் நியமித்துள்ள கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் மற்றும், அய்யப்பனுக்கு பூஜை செய்யும் தந்திரிகள், பந்தளம் அரச குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

இதில் யாரும், திருநங்கைகள் கோவிலுக்கு வருவதை எதிர்க்கவில்லை என்றும், அய்யப்பன் ஆலய சடங்குகள் மற்றும் மரபுகள் மாதவிடாய் வயதிலிருந்த பெண்களை மட்டுமே தடை செய்வதாக தெரிவித்ததாகவும் கூறப்படு கிறது.  அதைத்தொடர்ந்து, அவர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்த இன்று  அதிகாலை 4 மணியளவில் காவல்துறையினர் உதவியுடன் அவர்கள்  சபரிமலையில் உள்ள மலை மீது ஏறினர்.

இந்த திருநங்கைகள் 4 பேரும் எஎர்ணாகுளம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள். அவர்களின் பெயர் அனன்யா, திருப்தி, அவந்திகா மற்றும் ரஞ்சுமோல். இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமையே காவல்துறை அதிகாரிகளிடம்  தங்களுக்கு பாதுகாப்பு கோரியதாகவும், அப்போது, காவல்துறையினர், அவர்களை, கோவிலுக்குள் நுழைய வேண்டுமென்றால், ஆண்கள் ஆடையை அணியும்படி கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருநங்கைகள் 4 பேரும், கருப்பு நிறச்சேலை அணிந்தே கோவிலுக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், சென்னையில் உள்ள பெண்கள் அமைப்பு ஒன்று அய்யப்பன் கோவிலுக்கு செல்ல, கேரள அரசிடம் அனுமதி கோரி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 30 பெண்கள் கொண்ட குழுவினர் வரும் 23ந்தேதி சபரி மலை செல்ல இருப்பதாகவும், தங்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சபரிமலைக்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், சென்னையை சேர்ந்த பெண்கள் குழுவினரின் சபரிமலை விசிட் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.