டில்லி,

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று, தற்போது பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா, சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

வருமானத்துக்கு அதிகமான சொத்துகுவித்த வழக்கில் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கர்நாடக சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்ததை அடுத்து, சசிகலா, இளவரசி, சுதாகரன்  உட்பட 3 பேர் பெங்களூரு பரபரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்ததால், சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட  4 ஆண்டு சிறை தண்டனையை மறு பரிசீலனை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் தனித்தனியாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. விசாரணையின்போது இந்த மனு விசாரணைக்கு உகந்ததா என்று ஆராய்ந்து  ஏற்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து நீதிபதிகள் முடிவு செய்ய உள்ளனர்.