சாத்வியின் கர்கரே குறித்த புகார் தவறானது : நான்கு வருடம் முந்தைய தீர்ப்பு

டில்லி

ஹேமந்த் கர்கரே மீது சாத்வி பிரக்ஞா தாகுர் அளித்த புகார் தவறானது என நான்கு வருடம் முன்பு தேசிய மனித உரிமைஆணையம் தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த 2008 ஆம் வருடம் மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் சாத்வி பிரக்ஞா தாகுர் தீவிரவாத எதிர்ப்புப் படை அதிகாரி ஹேமந்த் கர்கரேவால் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு சாத்வி எட்டு வருடங்கள் சிறையில் இருந்தார். தற்போது ஜாமினில் வெளி வந்துள்ள சாத்வி பாஜக சார்பில் போபால் தொகுதியில் போட்டியிட உள்ளார்.

சாத்வி சமீபத்தில் தாம் சிறையில் மிகவும் கொடுமை அனுபவித்ததாகவும் அதற்கு ஹேமத் கர்கரே தான் காரணம் எனவும் தெரிவித்தார். அத்துடன் தனது சாபத்தினால் கர்கரே 26/11 மும்பை தாக்குதலில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்த தகவல் நாடெங்கும் கடும் எதிர்ப்பை கிளப்பியது. அதை ஒட்டி சாத்வி மன்னிப்பு கேட்டார்.

ஹேமந்த் கர்கரே குறித்து சாத்வி கூறிய புகார்களுக்கான வழக்கை தேசிய மனித உரிமை ஆணையக் குழு விசாரித்துள்ளது. அந்த குழுவில் அப்போதைய காவல்துறை அதிகாரிகள், சிறை துணை சூப்பிரண்ட், உள்ளிட்ட பலர் இடம் பெற்றிருந்தனர். இந்த குழு தனது தீர்ப்பை கடந்த 2015 ஆம் வருடம் ஜூலை மாதம் 8 ஆம் தேதி அன்று வெளியிட்டது.

அந்த தீர்ப்பில், “சாத்வி பிரக்ஞா தாகுர் அளித்த புகாரை ஒட்டி சிறைச்சாலை, நீதிமன்றம், மருத்துவமனை மற்றும் தீவிரவாத எதிர்ப்பு படை ஆகியோரிடம் இருந்த ஆவணங்கலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரனையின்படி சாத்வி அளித்த புகார் உண்மையல்ல என தெரிய வந்துள்ளது. இதனால் ஹேமந்த் கர்கரே குற்றமற்றவர் என்பது தெளிவாகி உள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

You may have missed