40/40 வெற்றி: கருணாநிதி நினைவிடம் மலர்களால் அலங்கரிப்பு

சென்னை:

நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 40 இடங்களையும் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ள நிலையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்திலும் 40க்கு 40 என்று அழகான ரோஜா மலர்களைக்கொண்டு எண்களை குறிப்பிட்டு அழகு படுத்தப்பபட்டு உள்ளது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடம் சென்னை மெரினாவில், அண்ணா நினைவிடம் அருகே அமைக்கப்பட்டுள்ளது. தினசரி நூற்றுக்கணக்கானோர் கருணாநிதி நினைவிடத்தை பார்வையிட்டு வருவதால், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பார்வையாளர்களை கவரும் விதத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.

தற்போது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக திமுக காங்கிரஸ் தலைமையில் 9 கட்சிகள் கொண்ட கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், திமுகவுக்கு 20 தொகுதிகளும், கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்  என்று திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில், 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில்,  கருணாநிதியின் நினைவிடத்தில் நாற்பதுக்கு நாற்பது என பூக்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இது பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.