சென்னை

சென்னையில் உள்ள கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.   இதில் சென்னையில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  சென்னை நகரில் கீழ்பாக்கம் பகுதியில் மனநலக் காப்பகம் அமைந்துள்ளது.  இங்கு மொத்தம் 40  வார்டுகள் உள்ளன.  இந்த காப்பகத்தில் 800 க்கும் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் இவர்களில் சிலருக்குக் காய்ச்சல் ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.   அந்த சோதனை முடிவில் சிகிச்சை பெறுவோர் மற்றும் சில ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவரை மொத்தம் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த காப்பக இயக்குநர் மற்றும் தலைமை மேற்பார்வையாளருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த மனநல காப்பக ஊழியர் ஒருவர், “சென்னை கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   இருந்தாலும் காப்பக நிர்வாகிகள் உண்மையான எண்ணிக்கையை வெளியிடவில்லை.இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு முழு பாதுகாப்பு கவச உடை வழங்கப்படுவதில்லை. முகக் கவசம் மற்றும் கையுறைகள் மட்டுமே அளிக்கப்படுகிறது.

கொரோனா பரவலுக்கு இதுவே முக்கிய காரணம் ஆகும்.   நோய்த் தொற்று ஏற்பட்ட வார்டுகள் மூடப்பட்டு அங்கிருந்தவர்கள் வேறு வார்டுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.   இங்கு சிகிச்சை பெறுவோருக்கு கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.  இதை மனதில் கொண்டு இங்குள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.