40 கோடி குட்கா ஊழல்: தமிழக உணவு பாதுகாப்புதுறை அலுவலகத்தில் சிபிஐ அதிரடி விசாரணை

சென்னை:

மிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த குட்கா ஊழல் விசாரணையை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதி மன்றம்  உத்தரவிட்டதை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் இன்று தமிழக உணவு பாதுகாப்புதுறை அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் பசாலா போன்ற பொருட்களை தடையை மீறி விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டதாகவும், இதில் ரூ.40 கோடி அளவில் லஞ்சம் கைமாறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில்  தமிழக சுகாதாரத்துறை  அமைச்சர் சி.விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் மற்றும் காவல்துறை, சுகாதாரத்துறை  அதிகாரிகள் மீது புகார்கள் உள்ளது.

இந்த விவகாரம் குறித்து   சென்னை உயர்நீதி மன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இதற்கிடையில்  போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெ. வீட்டில்,  சசிகலா தங்கியிருந்த அறையில் இருந்து, குட்கா விவகாரம் குறித்து அப்போதைய டி.ஜி.பி ராஜேந்திரன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய ரகசியக் கடிதம் கைப்பற்றப்பட்டதாக  வருமான வரித்துறை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து இருந்தது.

இந்த வழக்கின் பல்வேறு கட்ட விசாரணையின்போதே,  2 முறை விசாரணை அதிகாரி மாற்றப்பட்டனர்.  இது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, இந்த ஊழல் குற்றச்சாட்டில்  அமைச்சர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 25ந்தேதி  சென்னை உயர்நீதி மன்றத்தில்  நடைபெற்ற  விசாரணையின்போது, நீதிபதிகள்,  குட்கா முறைகேடு வழக்கை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க தமிழக அரசு தயங்குவது ஏன்? என்றும், இந்த வழக்கில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் தொடர்பு இருப்பதால் சிபிஐ விசாரணை அவசியம் என கருத்து தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் 26ந்தேதி விசாரணையின்போது,   குட்கா ஊழல் குறித்த வழக்கு விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதி மன்ற அமர்வு உத்தரவிட்டது.

இந்த நிலையில் தற்போது சிபிஐ தனது விசாரணையை முடுக்கி உள்ளது.  குட்கா வழக்கில் சிக்கிய மாதவ்ராவுக்கு உதவி செய்த அதிகாரிகள் யார், யார்? என்பது குறித்து தமிழக உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

அதுபோல சென்னை அருகே செயல்பட்டு வந்த  குட்கா குடோனுக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் யார், எப்போது அனுமதி வழங்கப்பட்டது என்பது போன்ற தகவல்களை திரட்டி வருகின்றனர். இதன் காரணமாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.