கேரள மருத்துவமனையில் அடையாளம் காண முடியாத நாற்பது உடல்கள்! கன்னியாகுமரி மீனவர்களா?

திருவனந்தபுரம்:

கி புயல் அடித்து ஓய்ந்த கேரள கடலில் 40 உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களின் உடல்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வங்கக்கடலில் அண்மையில் அடித்த ஓகி புயல் கடந்த 30ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளாவை நெருங்கியது. இரு மாநிலங்களும் புயலால் பலத்த சேதமுற்றன. புயலுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பலர் இதுவரை கரை திரும்பாததால் அவர்களின் உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

காணாமல் போன மீனவர்கள் பற்றி கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட பட்டியலில் 433 மீனவர்கள் உள்ளனர். இதில் 37 பேர் நாட்டுப்படகு மீனவர்கள், 398 பேர் விசைப்படகு மீனவர்கள் ஆவார்கள்.  இந்த பட்டியலின் படி  கிராமங்கள் வாரியாக நீரோடி 39, மார்த்தாண்டம் துறை 11, வள்ளவிளை 223, இரவிபுத்தன்துறை 1, சின்னத்துறை 66, தூத்தூர் 39, பூத்துறை 28, குளச்சல் 13, மிடாலம் 13, பேர் ஆகியோர் கரை திரும்பவில்லை. இதை ஒட்டி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிய வருகிறது.

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் இதுவரை 2 மீனவர்களை மட்டுமே இறந்தவர்களாக அறிவித்துள்ளது. தற்போது கடலுக்குள் செல்லும் மீனவர்கள் அங்கு கரை சேர்க்க முடியாத நிலையில் பல உடல்கள் மிதப்பதாக கூறி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாயின.  இருப்பினும் இதுகுறித்து அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததுபோல் தெரியவில்லை.

தற்போது ஓகி புயலுக்குப் பிறகு கடலில் மிதந்தது, கரையொதுங்கியது மற்றும் சக மீனவர்களால் மீட்கப்பட்டது என்று கேரளாவில் உள்ள மருத்துவமனைகளில் மொத்தம் 40 உடல்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது. இவர்கள் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த உடல்கள் அனைத்தும் டிஎன்ஏ பரிசோதனைக்கு பின்னரே உறுதி செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. மீனவர்ககளது உறவினர்கள் அவர்கள் உயிருடன் திரும்புவார்கள் என  காத்திருக்கும் நிலையில் இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.