டில்லி

மின் ஒளி மின்சார ஆலைகள் அமைப்பதில் சென்ற ஆண்டு 40% பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அரசு மரபு சாரா எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் மின் உற்பத்தித் துறையில் வருடா வருடம் புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.   இயற்கை முறையில் மின்சக்தி உற்பத்தி செய்வதில் தற்போது அதிக கவனம் செலுத்தப் பட்டு வருகிறது.    காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி ஆகியவை பெரும் பங்கு வகிக்கின்றன.    காற்றாலை மின்சாரம் வருடம் முழுவதும் நடைபெறாது.    ஆனால் வெப்பம் மிகுந்த நம்நாட்டில் வருடம் முழுவதும் சூரிய ஒளி மின்சார உற்பத்தி நடைபெறும்.

இவ்வகையில் அரசு மரபு சாரா எரிசக்தி நிறுவனம் சூரிய ஒளி மின்சார ஆலைகள் அமைப்பதை ஊக்குவித்து வருகிறது.    வருடா வருடம் புதிய சூரிய ஒளி மின்சார ஆலைகள் அமைக்கப் படுகிறது.  இந்நிலையில் அந்த நிறுவனம் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதில், “சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் மின் ஆலை நிறுவ குறைந்த தொகையே ஆகும் என கூறப்பட்டது.   ஆனால் அதற்கு பல உபகரணங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டி உள்ளது.

அரசு கடந்த 2017 அக்டோபர் முதல் இறக்குமதி செய்யப் படும் இந்த உபகரணங்களுக்கான இறக்குமதி வரியை 7.5% அதிகரித்துள்ளது.   அதனால் ஏற்கனவே ஒப்புக் கொண்ட தொகைக்கு இந்த சூரிய ஒளி மின் ஆலைகளை அமைக்க பல நிறுவனங்களால் முடியவில்லை.  இதனால் சூரிய ஒளி மின் ஆலைகள் இந்த வருடம் குறைவாக அமைக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டை விட 40% குறைவாக சூரிய ஒளி மின் ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன.    மேலும் தனியாரிடம் இருந்து பெறப்படும் இந்த மின்சாரத்துக்கான விலையும் மிகவும் குறைவாக உள்ளதால் பலர் இத்தகைய மின் உற்பத்தி ஆலைகள் அமைப்பதில் அதிக நாட்டம் செலுத்த வில்லை.” எனக் குறிப்பிட்டுள்ளது.