சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தப்பட்ட ரயில்சேவை படிப்படியாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை மக்களின் வசதிக்காக மேலும் 40 புறநகர் சிறப்பு ரயில் சேவைகளை தொடங்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில்  நிறுத்தப்பட்ட ரயில்சேவை  பின்னர் மத்திரயஅரசு அளித்த தளர்வுகள் காரணமாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அத்துடன் கடந்த செப்டம்பர் 7ந்தேதி முதல் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது. பின்னர்  கடந்த அக்டோபர் மாதம் 5ந்தேதி முதல் புறநகர் ரயில் சேவை தொடங்கப்பட்டது.

முதல்கட்டமாக சென்னையில், இன்றியமையாச் சேவைப் பணியாளர்களுக்காக மட்டுமே ரயில் இயக்கப்பட்டது. அந்த ரயிலில் சாதாரண பொதுமக்கள் ரயிலில் செல்ல அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது. பின்னர், அத்தியாவசிய பணிகளுக்கான தனியார் ஊழியர்கள், ஊடகத்துறையினர் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது ஓரளவுக்கு மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளதால்,  சென்னையில் புறநகர் ரயில்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர். புறநகர் ரயில் இயக்கம் இல்லாததால் மக்கள் பேருந்துகளை மட்டுமே நம்பி இருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்துகளில் கூட்ட நெரிசலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் புறநகர் ரயில் சேவையை தொடங்க மத்திய அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது சென்னையில் கூடுதலாக 40 சிறப்பு புறநகர் மின்சார ரெயில் சேவைகள் இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து கூறிய ரயில்வே அதிகாரி, தற்போதைய நிலையில்,  மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அத்தியாவசி பணிகள் மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்களுக்காக சென்னையில் 204 சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் கூடுதல் ரெயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனப்டி  கூடுதலாக 40 சிறப்பு மின்சார ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.

மேலும்,  40 சேவைகள் அதிகரிக்கப்பட்டு, 244 மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது. மேலும் சென்னையின் புறநகர்களான ஆவடி, கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி, செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை எழும்பூர் மற்றும் எம்.ஜி.ஆர். சென்ட்ரல் இடையே இயக்கப்பட்டு வந்த நிலையில் கூடுதலாக திருத்தணி வரை மின்சார ரெயில்கள் இயக்கப்படும். இதற்கான அட்டவணை, நேரம் முறையாக அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.