சுருங்குகிறது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பு..?

சென்னை: உலகப் புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் 40% பகுதிகள் வணிக நடவடிக்கைகளுக்காக திறந்துவிடப்பட உள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

செங்கல்பட்டு அருகே அமைந்துள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகளுக்கு புகலிடமாக திகழ்ந்து வருகிறது.

ஆனால், அந்த சரணாலயத்தின் இடப்பரப்பிறகு தற்போது ஆபத்து வந்துள்ளது. சரணாலயத்தின் எல்லைகளை மறுவரையறை செய்யுமாறு வனத்துறையிடமிருந்து வந்த முன்மொழிவுக்கு, வனவிலங்குகளுக்கான மாநில வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

வேடந்தாங்கல் ஏரியின் 30 ஹெக்டேர் பரப்பு மற்றும் அந்த ஏரியைச் சுற்றியுள்ள 5 ஏக்கர் வருவாய் நிலம் ஆகியவை, கடந்த 1998ம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக குறிப்பிடப்பட்டது. ஆனால், அந்த 5 ஏக்கர் வருவாய் நிலம் தற்போது 3 ஏக்கராக சுருங்குகிறது.

இந்த இடத்தில், தொழிற்சாலைகள் அமைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், சரணாலயத்தின் தற்போதைய இயற்கைச் சூழல் பாதிக்கப்படாது என்றும், பறவைகளின் பாதுகாப்பிற்கான உள்ளூர் மக்களின் ஆதரவு மீண்டும் கிடைக்கப்பெறும் என்றும் கூறுகிறார் முதன் வனவிலங்கு வார்டன் யுவராஜ்.