சுங்கச்சாவடி கட்டணம் 40 சதவீதம் உயர்வு: லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு

சென்னை:

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளுக்கான கட்டணம் 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 350-க்கும் அதிகமான சுங்கச்சாவடிகள் உள்ளன. அதில் தமிழகத்தில் 44 சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்ந்துள்ளது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச்சாவடிகளுக்கான கட்டணத்தை 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.

இந்த கட்டண உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த செப்டம்பரில் சுங்க கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உளள  23 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் சரக்கு வாகனங்களின் வாடகை மட்டுமின்றி தனியார் பேருந்துகளின் கட்டணமும் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.