தமிழகத்துக்கு 40 டி.எம்.சி தண்ணீர் திறக்க உத்தரவு! கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

டெல்லி:

 ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு 40 டி.எம்.சி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

மத்திய நீர்வளத்துறையின் கீழ் இணைக்கப்பட்டப் பிறகு காவிரி மேலாண்மை ஆணையத்தின் 6வது  கூட்டம், அதன் தலைவர் ராஜேந்திரகுமார் ஜெயின் தலைமையில் நேற்று காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.

அதில், உறுப்பினர் நவீன்குமார் மற்றும் தமிழ்நாடு, புதுவை, கர்நாடகா, கேரளா, ஆகிய மாநிலங் களின் பொதுப்பணித்துறை செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தமிழகம் சார்பில் பொதுப்பணித் துறைச் செயலர் கே.மணிவாசன், காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் ஆர்.சுப்பிரமணியன், உறுப்பினர் பட்டாபிராமன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் இருந்த படியே பங்கேற்றனர்.

கூட்டத்தில் கர்நாடக அணைகளின் நீர் இருப்பு குறித்தும், தமிழகத்துக்கு இம்மாதம் முதல் திறக்க வேண்டிய நீரின் அளவு குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது, “அணைகளில் தண்ணீர் இல்லை. மழை பெய்து தண்ணீர் வந்தால்தான் திறக்க இயலும்” என்று கர்நாடகா தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், கூட்டத்தின் முடிவில் ஜூன் மாதத்துக்கு 9.19 டி.எம்.சி, ஜூலை மாதத்துக்கு 31.24 டி.எம்.சி என இரண்டு மாதங்களுக்கு தமிழகத்துகு 40 டி.எம்.சி தண்ணீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து, கர்நாடகா சார்பில் பங்கேற்ற அதிகாரிகள், மேகதாதுவில் அம்மாநில அரசு கட்ட முயற்சித்துவரும் அணை மற்றும் நீர்மின் திட்டம் தொடர்பான திட்ட அறிக்கைக்கு அனுமதி வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு தமிழகம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கர்நாடகாவின் கோரிக்கையை விவாதத்துக்கு எடுக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.  மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதையும் தமிழகம் சார்பில் பங்கேற்றோர் சுட்டிக்காட்டினர். இதையடுத்து,  ஆணையக் கூட்டத்தை தள்ளி வைப்பதாக அறிவித்தார்.

You may have missed