லக்னோ: கடந்த 40 ஆண்டுகளாக உத்திரப்பிரதேச முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களின் வருமான வரி தொகையானது, அம்மாநில கருவூலத்தின் மூலமே செலுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 1981ம் ஆண்டு வி.பி.சிங்(முன்னாள் பிரதமர்) உத்திரப்பிரதேச முதலமைச்சராக இருக்கும்போது, முதல்வர்கள் மற்றும் மாநில அமைச்சர்களின் வருமான வரிக் கணக்கை, மாநில கரூவூலத்தின் மூலமாகவே செட்டில் செய்யும் சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

ஏழ்மையான பின்னணிகளிலிருந்து வந்து, மிகவும் குறைவான சம்பளம் பெறுபவர்களாக அமைச்சர்கள் இருப்பதால், அவர்களால் தங்களின் வருமான வரிக் கணக்கை செட்டில் செய்ய முடியாது என்று அப்போது அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டது. அப்போது மாநில கேபினட் அமைச்சர்களின் சம்பளமாக ரூ.1000 மற்றும் இணையமைச்சர்களின் சம்பளமாக ரூ.600 என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர், என்.டி.திவாரி, முலாயம் சிங் யாதவ், மாயாவதி, அகிலேஷ் யாதவ், கல்யாண் சிங், ராஜ்நாத் சிங் மற்றும் யோகி ஆதித்யநாத் வரை பல முதல்வர்களும், கிட்டத்தட்ட 1000 அமைச்சர்களும் பதவி வகித்துவிட்டனர்.

ஆனால், ஏழைகளான(!) அவர்களின் வருமான வரி கணக்கு மாநில கருவூலத்தின் மூலமே இன்றுவரை செட்டில் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.