41 சிலை கடத்தல் வழக்குகளின் ஆவணங்கள் மாயம்: அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை:

மிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளில்,  41 வழக்குகளின் ஆவணங்கள் மாயமாகி உள்ளதாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து  விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக உள்துறைச் செயலாளர், டிஜிபிக்கு  உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் நடைபெற்ற சிலை கடத்தல், திருட்டு தொடர்பான வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஐ.ஜி. பொன்மாணிக்க வேலை நியமனம் செய்திருந்தது. அவரது பணிக்காலம்  ஓய்வு பெற்ற நிலையில், சிலைக்கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஏடிஜிபியிடம் ஒப்படைத்தார். தற்போது, சிலைகடத்தல் பிரிவு தலைவராக ஐ.ஜி. அன்பு நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில்,  சிலைக் கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 41 வழக்குகளின் ஆவணங்கள், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில்  மாகயமாகி இருப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்தக் கோரியும்,  வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதைத் தொடர்ந்ஆது, சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் மாயமானது குறித்து கடந்த  2018-ம் ஆண்டு மனுதாரர் புகார் அளித்தும், இதுவரை பதிலளிக்காதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு தமிழகஅரசு சார்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து , சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் மாயமானது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபி மற்றும் உள்துறைச் செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 31-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.