காஷ்மீர் கல்வீச்சு சம்பவங்களில் 41 பாதுகாப்பு படையினர் பலி

ஸ்ரீநகர்:

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் தீவிரவாதிகள் தொடர்புடைய மற்றும் கல்வீச்சு சம்பவங்களில் 41 பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் இன்று தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

இந்த ஆண்டின்ன் முதல் 6 மாதங்களில் தீவிரவாத தொடர்புடைய தாக்குதல்களில் 17 ராணுவ வீரர்கள், 20 போலீசார் மற்றும் 2 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் என 39 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
96 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் 28 பேர் ராணுவ வீரர்கள், 31 பேர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மற்றும் 37 போலீசாரும் அடங்குவர்.

இதேபோன்று 734 கல் வீச்சு சம்பவங்களில் 2 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கொல்லப்பட்டு உள்ளனர். 811 பேர் காயமடைந்து உள்ளனர். காயமடைந்தவர்களில் 592 பேர் போலீசார் மற்றும் 219 பேர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் ஆவர். இதன் மூலம் மொத்தம் 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பொதுமக்களில் 32 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 117 பேர் காயமடைந்துள்ளனர். இதில் தீவிரவாத தொடர்புடைய சம்பவங்களில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 54 பேர் காயமடைந்து உள்ளனர். 7 பேர் சட்டம் மற்றும் ஒழுங்கு சம்பவங்களில் கொல்லப்பட்டுள்ளனர். 63 பேர் காயமடைந்து உள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.