கேரள வெள்ளத்தில் மூன்றே நாட்களில் 42 பேர் உயிரிழப்பு 

திருவனந்தபுரம்

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 80 இடங்களில் நிலச்சரிவு மற்றும் 42 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையால் கேரளா மாநிலம்  வெள்ளத்தில் மூழ்கியது. தற்போது இந்த மாதம் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் பல இடங்களில் நிலச்சரிவு உண்டாகி இருக்கிறது எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், வயநாடு,கண்ணூர், காசரகோடு ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் சுமார் 1,24,464 பேர் 1111 நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதில் கோழிக்கோட்டில் 25,028 பேரும் வயநாட்டில் 24,090 பேரும் அடங்குவர். மலப்புரம் பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் பலர் சிக்கிக் கொண்டு உயிர் இழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது வரை மாநிலம் எங்கும் சுமார் 42 பேர் மூன்று நாட்களில் உயிர் இழந்துள்ளனர். சுமார் 80 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

கபினி ஆற்றின் துணை நதியான கரமந்தோடு ஆற்றின் குறுக்கே  கட்டப்பட்டுள்ள பனசூர் சாகர் என்னும் அணை ஆசியாவின் இரண்டாம் பெரிய அணையாகும் இந்த அணை நிரம்பி வழியும் அபாயம் உள்ளதால் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதிகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. மாநிலத்தின் பல பகுதிகளிலும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் விமானச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் வேகமாக நடைபெறுவதாகவும் வெள்ளம் குறித்த வதந்தியைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை  எடுக்கப்படும் எனக் கேரள முதல்வர் பிணராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மீட்புப் பணியில் ராணுவம், கடற்படை, கடலோரக் காவல் படை, தேசிய பேரிடர் மீட்புக் காவலர்கள், தன்னார்வ தொண்டர்கள், உள்ளூர் மீனவர்கள் ஆகியோர் பணியில் உள்ளனர்.