லிஸ்பன்:

போர்ச்சுக்கலில் ஏற்பட்ட பயங்கர காட்டு தீயில் சிக்கி 43 பேர் பலியாகினர். 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தெற்கு ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கலில் கடும் வெப்பம் நிலவுகிறது. 104 பாரன்ஹீட்டை தாண்டியதால் வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடுமையான வெப்பக் காற்று வீசுகிறது இதனால் அங்குள்ள 60 க்கும் மேற்பட்ட வனப்பகுதிகளில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் தீயணைப்பு படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், போர்ச்சுகலின் மத்திய பகுதியில் உள்ள பெட்ரோகா கிரேண்டே என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் அவ்வழியாக கார்களில் சென்ற பயணிகள் சிக்கினர். கார்களுக்குள் இருந்தபடியே பலர் பலியாகினர். தற்போது வரை 43 பேர் பலியானதாகவும் 16 பேர் காயம் அடைந்துள்ளனர்.

பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 60-க்கும் மேற்பட்ட வனப்பகுதிகளில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வனப்பகுதியை ஒட்டி கிராம மக்கள் தீயில் சிக்கி கொண்டுள்ளனர், அவர்களை மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது. போர்ச்சுகலுக்கு உதவும் வகையில் தீயை அணைக்க 2 விமானங்களை ஸ்பெயின் அனுப்பியுள்ளது. போர்ச்சுக்கலில் ஏற்பட்ட மிகப்பெரும் சோக சம்பவமாக இது கருதப்படுகிறது என்று அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.