தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு 44 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ஜூலை1ந்தேதி கலந்தாய்வு தொடக்கம்

சென்னை:

மிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கு 44 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது. தர வரிசை பட்டியல் 28ந்தேதி வெளியிடப்படும் என்றும், ஜூலை 1ந்தேதி கலந்தாய்வு தொடங்கும்,  அதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் கூறி உள்ளது.

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம் கடந்த 11ந்தேதி தொடங்கி 18ந்தேதி மாலையுடன் முடிவடைந்தது. விண்ணப்பம் வந்து சேர நேற்று கடைசி நாளாகும். எம்பிபிஎஸ், பிடிஎஸ்  மருத்துவ படிப்புகளுக்கு  இதுவரை  43, 935 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

அதைத்தொடர்ந்து எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு  தரவரிசைப் பட்டியல் வரும் 28-ம் தேதி வெளியிடப்படு கிறது.

மருத்துவ படிப்பில் சேர அரசு இடங்களுக்கு 24,933 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதுபோல நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 13,338 விண்ணப்பங்கள் என மொத்தம் 38,271 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இணைய தளங்கள் மூலம் பதிவிறக்கி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாகவும், மொத்தம் 43ஆயிரத்து 935 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரி மற்றும்  சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி  456 எம்பிபிஎஸ் இடங்கள்   30 பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடுக்கு கொடுக்கப்படுகின்றன. அதுபோக மீதமுள்ள இடங்களில் தமிழக மாணவ மாணவிகள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுவார்கள்.

தர வரிசை பட்டியல் வெளியானதும், ஜூலை 1ந்தேதி முதல் 5ந்தேதி வரை முதல்கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது.

இரண்டாம் கட்ட கலந்தாய்வு  ஜூலை 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடக்க உள்ளது.

2018-19-ம் கல்வி ஆண்டு மருத்துவ  மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) என்ற இணையதளத்தில் இன்று தொடங்குகிறது. இரண்டு கட்டங்களாக கலந்தாய்வு நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.