புதுடெல்லி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஆட்களை நியமனம் செய்வதில் நடந்த முறைகேட்டில், அந்த வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் உள்ளிட்ட மொத்தம் 446 ஊழியர்களுக்கு எதிராக சிபிஐ தரப்பில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள், சிபிஐ வழக்கறிஞரால், அந்த அமைப்பின் சிறப்பு நீதிபதி எஸ்.ஜவஹர் முன்னிலையில் பதிவுசெய்யப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 446 பேருக்கும், ஏப்ரல் 3ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

வங்கி யூனியன் தலைவர்கள் மற்றும் பல ஊழியர்கள் மீது, சதியாலோசனை, ஏமாற்றுதல், மோசடி மற்றும் ஊழல் ஆகிய பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 2013 – 2015ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆளெடுப்பு சம்பவங்களில் இந்த முறைகேடு நடைபெற்றதாக குறிப்பிடப்படுகிறது.

நாடு முழுவதிலுமுள்ள கிளைகளுக்கு, துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் தூதுவர்கள்(messenger) ஆகியோரை பணியமர்த்துவதில்தான் முறைகேடுகள் நடந்ததாகவும், குறிப்பிட்ட தகுதிகளைவிட கூடுதல் தகுதி வாய்ந்தோர் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிந்தோர் ஆகியோரெல்லாம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

– மதுரை மாயாண்டி