பெய்ரூட்:

ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் 45 சிரியா கிளர்ச்சியாளர்கள் பலியாயினர்.

 

இட்லிப் எனும் மாகாணத்தை கைப்பற்றும் போரில் சண்டை தவிர்ப்புப் பகுதியில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் ஃபய்லாக் அல் -ஷாம் எனும் போராளிக்குழுவின் உறுப்பினர்கள் இறந்ததாக சிரியாவின் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது.

இந்த அமைப்பினருடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ரஷ்ய ஆதரவு பெற்ற குழுக்களும் கலந்து கொண்டிருந்த நிலையில் இத்தாக்குதல் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தாக்கப்பட்டக் குழு எகிப்தின் முஸ்லிம் பிரதர்ஹூட் அமைப்பிற்கு நெருக்கமானதாகவும் கருதப்படும் ஒன்றாகும். ”ரஷ்யாவின் இத்தாக்குதல் வியப்பைத் தரவில்லை என்று போராளிக்குழுவின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். “நாங்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்தாலும் ரஷ்யர்களுக்கு நண்பர்கள் என்றோ ரஷ்யா நடுநிலையாக நடந்து கொள்கிறது என்றோ பொருள் கிடையாது” என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு பஷார் ஆசாத் அரசிற்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். ரஷ்யா தனது கூட்டாளியான சிரிய அதிபர் ஆசாத்திற்கு ஆதரவாக 2015ம் ஆண்டு முதல் நேரடியாக சிரியாவின் உள்நாட்டுப்« பாரில் தலையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.