‘கரட்டோரம் மூங்கில் காட்டில்’ இசைத்துக்கொண்டிருந்த இளையராஜா லண்டன் ‘ராயல் பில்ஹோர்மோனிக் ஆர்கெஸ்ட்ரா’ வரை தனது முத்திரையை பதித்து ‘மேஸ்ட்ரோ’ இளையராஜா என்று புகழின் உச்சிக்கு செல்ல காரணமாயிருந்த அவரது முதல் படமான ‘அன்னக்கிளி’ வெளியாகி இன்றோடு 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

1976 ம் ஆண்டு மே மாதம் 14 ம் தேதி வெளியான ‘அன்னக்கிளி’ படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் வித்தியாசம், அதுவரை திருமண வீடுகளில், கே.வி. மகாதேவன் இசையில் சாரதா திரைப்படத்தில் இடம்பெற்ற “மணமகளே மருமகளே வா வா” பாடல் மட்டுமே எங்கும் ஒலித்து கொண்டிருக்க, 76 க்குப் பின் அந்த வரிசையில் இணைந்தது “அடி ராக்காயி… மூக்காயி…” என்று தொடங்கும் பாடல்.

 

முதல் படத்தின் பாடல்கள் மூலம் கிராமங்களிலும் பட்டிதொட்டிகளிலும் பிரபலமான இளையராஜா, “ராஜா…ராஜாதி..ராஜன்…இந்த ராஜா” என்று சென்னை நகர இளைஞர்களிடையே ‘மேஜிக் ஜர்னி’யும் நிகழ்த்தினார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னணி இசையமைத்து உலகம் முழுதும் கோடானு கோடி ரசிகர்களை தன் இசையால் வசப்படுத்தி வைத்திருக்கிறார் ‘இசைஞானி’ இளையராஜா.

தனது 45 ஆண்டு கால இசைப்பயணத்தை நிறைவு செய்யும் இந்த ‘ராகதேவன்’, இப்போதும் பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து கொண்டிருக்கிறார், இவரது இசைப்பயணம் மேலும் பல ஆண்டுகள் தொடர வாழ்த்துவோம்.