சென்னை

ஜெயலலிதா மரணம் குறித்து வந்துள்ள புகார்கள் மற்றும் பிரமாணப் பத்திரங்கள் உட்பட 450 ஆவணங்களை சசிகலாவின் வழக்கறிஞரிடம் விசாரணை ஆணையம் வழங்கி உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்தது.     ஆணையத்தின் விசாரணையில் சசிகலா மற்றும் ஜெயலலிதாவின் உறவினர்கள்,  மருத்துவர்கள்,  அரசு அதிகாரிகள் உட்பட பலர் ஆஜராகி விளக்கம் தந்துள்ளனர்.  சசிகலாவுக்கு அழைப்பு விடுத்த போது அவரது வழக்கறிஞர் சசிகலாவுக்கு எதிராக அளிக்கப்பட்ட அனைத்து விவரங்களையும் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

விசாரணை ஆணையம் அதற்கு ஒப்புதல் அளித்தது.   அதைத் தொடர்ந்து  சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்துர் பாண்டியனிடம் 2596 பக்கங்கள் கொண்ட 450 ஆவணங்களை ஆணையம் அளித்துள்ளது.    இதற்கு விளக்கம் அளிக்க 15 நாட்கள் அவகாசம் கேட்டு சசிகலா தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை தனது சொந்த ஊருக்கு சென்ற நிதிபதி ஆறுமுகசாமிக்கு உடல்நிலை சரியில்லாததால்  இன்று அவரால் மீண்டும் பணிக்கு வர இயலாது என கூறப்படுகிறது.    இதை ஒட்டி விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.