பாஸ்போர்ட் வாங்க லஞ்சம் அளிக்கும் 46% இந்தியர்கள்

டில்லி

பாஸ்போர்ட் வாங்கவும் புதிப்பிக்கவும் 46% இந்தியர்கள் லஞ்சம் கொடுப்பதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

புதிய பாஸ்போர்ட்களை பெற ஒரு செயலி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.   அந்த செயலியை அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே ஆயிரக்கணக்கானோர் டவுன்லோடு செய்துள்ளனர்.   அந்த செயலி மூலம் பலர் புதிய பாஸ்போர்ட்கள் பெறவும் பழையனவற்றை புதிப்பிக்கவும் செய்கின்றனர்.   ஆயினும் பாஸ்போர்ட் வழங்குவது சரிவர நடைபெறவில்லை என புகார்கள் வருகின்றன.

இந்நிலையில் லோகல் சர்க்கிள் என்னும் அமைப்பு இது குறித்து ஆய்வு ஒன்றை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.   அந்த ஆய்வறிக்கையில், “இந்தியர்களில் 46% பேர் பாஸ்போர்ட்டுக்காக லஞ்சம் கொடுக்கின்றனர்.   தனி மனிதர்கள் பாஸ்போர்ட் பெறுவது நிறைய சமயங்களில் எளிதாக இல்லை.  புதிப்பிப்பதற்கும் அதே நிலை நிலவுகிறது.   ஒவ்வொன்றுக்கு ஏராளமான ஆவணங்கள் கேட்கப்படுகின்றன.   அதனால் காலதாமதம் உண்டாகிறது.

இதற்காக பலரும் தரகர்களை நாடுகின்றனர்.   அவர்கள் மூலம் லஞ்சம் கொடுத்து தங்கள் வேலையை முடித்துக் கொள்கின்றனர்.   அத்துடன் காவல்துறை ஆய்விலும் அதிக கால தாமதங்கள் நிகழ்கின்றன.   இதை விரைவில் முடிக்க பலர் லஞ்சம் கொடுக்கின்றனர்.    லஞ்சம் கொடுப்பவர்களில் 36% பேர் காவல்துறையினருக்கு லஞ்சம் கொடுக்கின்றனர்.    மீதமுள்ளோர் தரகர் மூலம் லஞ்சம் அளித்துள்ளனர்.

இதற்கான தீர்வு அதிகமான ஆவணங்கள் அளிப்பதில் இருந்து விலக்கு அளிப்பது ஒன்றே ஆகும்.   மேலும் ஆன்லைன் மூலமாக பாஸ்போர்ட் அளிப்பதை அதிகரிக்க வேண்டும்.    அலுவலக தாமதத்தை தவிர்க்க ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கவுண்டர்கள் அமைக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.