வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகவும், நாட்டின்  46-வது ஜனாதிபதியாகவும்,  ஜோ பைடன் இன்று பதவி ஏற்கிறார். அவருடன் தமிழக வம்சாவளியைச் சேரந்த கமலா ஹாரிஸ்  துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்றது. இதில், அதிபர் டிரம்பும்,அவரை எதிர்த்து,  ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பைடன் போட்டியிட்டார். அதுபோல துணை ஜனாதிபதி பதவிக்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், தமிழகத்தை பூர்விகமாக கொண்டவருமான கமலா ஹாரிஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதையடுத்து, புதிய ஜனாதிபதி.  துணை ஜனாதிபதி பதவி ஏற்பு விழா இன்று நடைபெறுகிறது.  அதன்படி, அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் இன்று பதவி ஏற்கிறார். இவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாவார். அவருடன், துணை ஜனாதிபதியாக  கமலா ஹாரிஸ்  பதவி ஏற்கிறார்.

கொரோனா அச்சுறுத்தல் மற்றும் நாடாளுமன்றத்துக்குள் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை  காரணமாக பதவி ஏற்பு நிகழ்வுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.  வாஷிங்டன் முழுவதும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பதவி ஏற்பு விழா எளிமையாக நடத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் கிழக்கு மாகாணங்களுக்கான நேரப்படி காலை 11.30 மணியளவில் (இந்திய நேரப்படி இரவு 10 மணி) பதவி ஏற்பு விழா தொடங்கும்.

நண்பகல் 12 மணியளவில் ஜோ பைடனும் கமலா ஹாரிசும் பதவி ஏற்றுக் கொள்வார்கள் அதிபர,  ஜோ பைடனுக்கு அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிரமாணம் செய்து வைப்பார். அதேபோல் துணைஅதிபர்  கமலா ஹாரிசுக்கு சுப்ரீம் கோர்ட்டு பெண் நீதிபதி சோனியா சோட்டோமேயர் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

அமெரிக்க மக்கள் பதவியேற்பு விழாவை காண தலைநகருக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என ஜோ பைடனின் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த பதவி ஏற்பு பதவியேற்பு விழாவின்போது  பாரம்பரிய வழக்கமான ராணுவ தளபதி படைகளை பார்வையிடுதல், ராணுவ அணிவகுப்பு, `இணைய அணிவகுப்பாக’ அமெரிக்கா முழுவதும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோ பைடனின் ஆதரவாளரான அமெரிக்க பாடகி லேடி காகா தேசிய கீதம் பாடுவார். நடிகை ஜெனிபர் லோபசின் பாடல் நிகழ்ச்சி, அமெரிக்க நடிகர் டாம் ஹான்க் 90 நிமிட நிகழ்ச்சி போன்றவை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிசின் பதவி ஏற்பு விழா, அமெரிக்காவின் முன்னணி செய்தி சேனல்கள், சமூக வலைதளங்களில்  நேரலை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.