இந்தியாவை சேர்ந்த 471பேர் சிறைச்சாலையில் கைதிகளாக உள்ளனர் – பாக்கிஸ்தான்

இஸ்லாமாபாத்: பாக்கிஸ்தான் சிறைச்சாலையில் இந்தியாவை சேர்ந்த 471 பேர் கைதிகளாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. பாக்கிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவை சேர்ந்த 471பேர் பாக்கிஸ்தான் சிறைச்சாலையில் கைதிகளாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
pakistan
2008ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் இணைந்து போட்ட தூதரக அணுகல் ஒப்பந்தத்தின் படி இந்த கைதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஆண்டிற்கு இரண்டு முறை அதாவது ஜனவரி 1ம் தேதி மற்றும் ஜூலை 1ம் தேதி இரு நாடுகளும் தங்கள் சிறையில் உள்ள கைதிகளின் பட்டியலை வெளியிட ஒப்புக்கொண்டது. அதன்படி இன்று பாக்கிஸ்தான் தனது சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் விவரங்களை இந்தியாவிற்கு அளித்துள்ளது.

சிறையில் உள்ள கைதிகளில் 418 பேர் மீனவர்கள் என்றும் 53பேர் எல்லை தாண்டி நுழைந்ததன் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாக்கிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவும் தனது பங்கிற்கு சிறைச்சாலையில் உள்ள பாக்கிஸ்தான் கைதிகளின் பட்டியலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.