இந்தோனேசியாவை புரட்டிப்போட்ட நிலநடுக்கம்- சுனாமி: 48 பேர் பலி

--

ஜகர்தா:

ந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர  நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக  48 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. பலி விகிதம் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் 7.5 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.

ஆனால், எச்சரிக்கை திரும்பபெறப்பட்ட சில  நிமிட நேரங்களில் அங்கு சுனாமி அலை எழுந்து பயங்கரமாக தாக்கியது. சுமார் 2 மீட்டர் உயரத்திற்கு எழுந்த அலைகள் கரையை நோக்கி சீறிப்பாய்ந்தன. இதன் காரணமாக கடற்கரை பகுதியில் உள்ள  பல்வேறு கிராமங்களில் உள்ள வீடுகள் சுனாமியில் சிக்கி இடிந்து விழுந்தன.

இந்த திடீர் சுனாமியில் ஏராளமானோர் சிக்கி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டனர். அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்கட்ட தகவலின்படி இதுவரை 48 பேர் உயரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால்,  ஏராளமான பேரை காணவில்லை என்றும்.. அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை என்று  அஞ்சப்படுகிறது.

நூற்றுக்கணக்கானோர்  காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், கடற்கரை பகுதியில்  ஆங்காங்கே மனித உடல்கள் காணப்படுவதால் உயிரிழப்பு அதிக அளவில் இருக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

கடற்கரை பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அரசு கூறி உள்ளது.