48% இந்தியர்கள் உணவு விநியோகத்தை விரும்புகிறார்கள்: உபெர் ஈட்ஸ் கணக்கெடுப்பு!

புதுடில்லி: உபெர் ஈட்ஸ் மேற்கொண்ட ஒரு கணக்கெடுப்பின்படி, அதிகமான இந்தியர்கள் வெளியே சென்று சாப்பிடுவதை விட உணவை ஆர்டர் செய்து வருவித்து உண்பதை விரும்புகிறார்கள் என்று அதன் அறிக்கையின் புள்ளிவிவரத்தில் தெரியவந்துள்ளது.

“48% இந்தியர்கள் இவ்வாறு ஆர்டர் செய்வதை விரும்புகிறார்கள். இது வசதியானதாக இருப்பதும் மற்றும் வழமையான நடைமுறைகளை உடைப்பதும் இதற்கு ஒரு மிகப்பெரிய உந்து காரணியாக உள்ளது”. என்று ‘இந்தியாவின் உணவு மனநிலை’ ஆராய்ச்சி அறிக்கை தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 15, 2019 வரை இந்தியா முழுவதும் 13 நகரங்களில் உபெர் ஈட்ஸ் சார்பாக இப்சோஸ் நடத்திய ஆன்லைன் கணக்கெடுப்புகள் மற்றும் நேர்காணல்கள் மூலம் 15-50 வயதுடைய 4,000 நுகர்வோர் மத்தியில் குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது வீட்டு உணவை உட்கொள்கின்றனர் என அவ்வறிக்கைக் கூறுகிறது.

கணக்கெடுப்பின்படி, 34% இந்தியர்கள் வெளியே சாப்பிட விரும்புகிறார்கள், 18% பேர் எடுத்துச் செல்ல விரும்புகிறார்கள். வெளியே உணவு வாங்க விரும்பும் 48 சதவீதத்தினரில், 76 % பேர் அதை தங்கள் வீட்டில் வைத்து உண்ணவோ, 13% பேர் அதை தங்கள் பணியிடத்துக்கோ அல்லது கல்லூரிக்கோ 5% பேர் நண்பரின் வீட்டிற்கோ டெலிவரி செய்ய விரும்புகிறார்கள்.

தனிநபர் பொருளாதர தன்னிறைவு தனது உணவை தானே தேர்வு செய்யும் உரிமை நிலையை அடைந்து விட்டதாகக் கருதுவதும் இதற்கான காரணியாகும். பதிலளித்தவர்களில் பாதி பேர், சமையல்காரரை வேலைக்கு அமர்த்துவதை விட உணவை வழங்குவது ஒரு புத்திசாலித்தனமான முடிவு என்று கூறினர். சமையல்காரர் வைத்து சொந்தமாக சமைப்பது அதிக செலவு மற்றும் கடினமானது என்றும் கூறினர்.