காணும் பொங்கல்: சென்னையில் 480 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிப்பு

சென்னை:

காணும் பொங்கல் அன்று பொதுமக்களின் வசதிக்காக  சென்னையில் 480 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் வரும் 17ந்தேதி (வெள்ளிக்கிழமை) காணும் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் பொதுமக்கள் தங்களது உறவினர்களை சந்திக்கவும், பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் செல்வது வாடிக்கை.

இந்த நிலையில், காணும் பொங்கலை முன்னிட்டு, சென்னையில் பல்வேறு முக்கிய இடங்களுக்கு 480 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கோ.கணேசன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகரின் சுற்றுலா தளங்களை காண வரும் பொதுமக்களின் வசதிக்காக, அண்ணா சதுக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, வி.ஜி.பி. கோவளம், மாமல்லபுரம், கிஷ்கிந்தா, குயின்ஸ்லேண்ட், பெசன்ட் நகர், பிராட்வே, தாம்பரம், திருவான்மியூர், எம்.ஜி.எம்., முட்டுக்காடு (படகு குழாம்), கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் சுற்றுலாப் பொருட்காட்சி நடைபெறும் தீவுத் திடல் ஆகிய இடங்களுக்கு 480 சிறப்புப் பேருந்துகள், சென்னை மாநகரின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இயக்கப்பட உள்ளது என்று கூறி உள்ளார்.