சென்னை: தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையம் சார்பில் 4 நாட்கள் வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், அதிகபட்சமாக சென்னையில் மட்டும், புதியதாக பெயர் சேர்க்க  1,47,601 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 2லட்சத்துக்கும் அதிகமானோர் புதியதாக பெயர்களை சேர்க்க விண்ணப்பித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. அதுபோல பெயர் நீக்கத்தில் சேலம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 5 மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்கியுள்ள தேர்தல் ஆணையம்  நவம்பர் 6ந்சதேதி அன்று வரைவு வாக்காளர் பட்டியலை  வெளியிடப்பட்டது. தொடர்ந்து,  01-01-2021 அன்று 18வயது பூர்த்தியடையும் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என அறிவிக்கப்பட்டு, அதற்கான முகாம்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, நவம்பர் 21 மற்றும் 22, டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் (4 நாட்கள்) தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.  4 நாட்கள் நடைபெற்ற இந்த முகாமில்,  “வாக்காளர் பட்டியலில் பெயர்கள், விலாசம் மற்றும் விவரங்கள் சேர்ப்பது / நீக்குவது / மாற்றுவது ஆகியவற்றிற்கான மொத்தமதாக, 4,81,698 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. பெயர்கள் நீக்கம் செய்ய 1லட்சத்து 13ஆயிரத்து 930 பேரும்,  திருத்தம் செய்ய 72ஆயிரத்து 292 பேரும் விண்ணப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதியதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ள மாவட்டங்களில் சென்னையே முதலிடத்தை பெற்றுள்ளது. இங்கு மட்டும் 1,47,601 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து, 2வது இடத்தில் திருவள்ளூர் மாவட்டம் இடம்பிடித்துள்ளது. அங்கு  1,28,535 பேரும், 3வதாக கோவையில் 1,22,030 பேரும், 4வதாக செங்கல்பட்டில், 1,03,372 பேரும், 5வதாக சேலம் மாவட்டத்தில், 98,479 பேரும் விண்ணப்பித்து உள்ளனர். மேலும் பல மாவட்ட்ங்களில் ஆயிரக்கணக்கில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கப்ட்டு உள்ளது.

அதுபோல, பெயர் நீக்கவும்  ஏராளமானோர் மனு கொடுத்துள்ளனர். பணி மற்றும் பல்வேறு காரணங்களால், இடம்மாறி வேறு இடங்களில் வசிப்பவர்கள், புதிய இடத்தில், வாக்காளர் அட்டை பெறும் நோக்கில் ஏற்கனவே இருந்த இடத்தில் இருந்து பெயர்களை நீக்க மனு கொடுத்துள்ளனர்.

இதில் சேலம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. சேலம் மாவட்டத்தில் மட்டும், 56,300 மனுக்கள், பெயர்களை நீக்குவதற்காக கொடுக்கப்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து 2வதுஇடத்தில் சென்னை உள்ளது. இங்கு 31,185 பேர், தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக்கோரி விண்ணப்பித்து உள்ளனர்.

3வதாக திருப்பூர் மாவட்டத்தில் 22,393 மனுக்களும்,  4வதாக நாமக்கல் மாவட்டத்தில் 22,370 மனுக்களும், கோவையில், 21,896 மனுக்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பங்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய முறையில் பரிசீலனை செய்து முடிவெடுக்கும் என்றும்,  அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.