21-வது சதத்தை பூர்த்தி செய்த ஹிட்மேன் ரோகித்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ஹிட்மேன் ரோகித் சர்மா தனது 21-வது சதத்தை பூர்த்தி செய்தார்.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். ஷிகர் தவான், விராட் கோலி ஆட்டமிழந்த பின்னர், ரோகித் சர்மா பொறுப்பை உணர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 33-வது ஓவரின் 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி, 98 பந்தில் சதம் அடித்தார்.

rohit

இது ரோகித் சர்மாவின் 21-வது சதம் ஆகும். இதன்மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 21-வது சதத்தை கடந்த 4-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஹசிம் அம்லா 116 இன்னிங்சிலும், விராட் கோலி 138 இன்னிங்சிலும், ஏபி டி வில்லியர்ஸ் 183 இன்னிங்சிலும் 21 சதங்கள் அடித்து முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.

ரோகித் சர்மா இந்த சதத்துடன் 186 இன்னிங்ஸ் உடன் 4-வது இடத்தை பிடித்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் 200 இன்னிங்ஸ் உடன் 5-வது இடத்தில் உள்ளார். இவர் தொடக்க வீரராக களம் இறங்கி 19 சதங்கள் விளாசியுள்ளார். அதிவேகமாக 19 சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2-வது இடம் பிடித்துள்ளார். ஹசிம் அம்லா 102 இன்னிங்ஸ் உடன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

தற்போது ரோகித் சர்மா 107 இன்னிங்ஸில் அடித்து 2-வது இடம் பிடித்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் 3-வது இடத்திலும், தில்சன் 4-வது இடத்திலும், கிறிஸ் கெய்ல் 5-வது இடத்திலும் உள்ளனர். 2013-ம் ஆண்டு ஜனவரிக்குப் பின் அதிக சதங்கள் விளாசியர் பட்டியலில் 2-வது இடம்பிடித்துள்ளார். விராட் கோலி 25 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். ரோகித் சர்மா 19 சதங்கள் அடித்துள்ளார். ஹசிம் அம்லா 16 சதங்களும், தவான் 15 சதங்களும் அடித்துள்ளனர்.

மேலும், ரோஹித் தொடர்ச்சியாக 9 தொடர்களில் சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார். அவை,
1. சாம்பியன்ஸ் டிராபி
2. இலங்கையில் நடைபெற்ற தொடர் (2 சதங்கள்)
3. இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா தொடர்
4. இந்தியாவில் நடைபெற்ற நியூசிலாந்து தொடர்
5. இந்தியாவில் நடைபெற்ற இலங்கை தொடர்
6. தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற தொடர்
7. இங்கிலாந்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடர்
8. ஆசிய கோப்பை
9. இந்தியாவில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடர்